உள்ளூர் செய்திகள்
புதுவைக்கு மாநில அந்தஸ்து-நிதியை கவர்னர் தமிழிசை பெற்றுத்தர வேண்டும் - முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தல்
புதுவைக்கு மாநில அந்தஸ்து-நிதியை கவர்னர் தமிழிசை பெற்றுத்தர வேண்டும் என்று முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையின் வளர்ச்சி பற்றி கவர்னரின் சமீபத்திய கருத்துக்கள் மிகைப்ப டுத்தப்பட்டவையாகவும், ஆதாரமற்றவையாகவும் உள்ளன. கவர்னர், புதுவை வளர்ச்சி பெறப்போகிறது என ஆர்வத்தோடு கூறுகிறார். ஆனால் முதல்-அமைச்சர் மாநில அந்தஸ்து தராததால், புதுவை வளர்ச்சியடையவில்லை என கூறுகிறார்.
இதில் எது உண்மை? என கவர்னர் தெளிவுபடுத்த வேண்டும். புதுவையில் கடந்த 2 ஆண்டாக வளர்ச்சியில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. புதிய தொழிற்சாலைகள் தொடங்கவில்லை. தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் மூடப்பட்டு வருகின்றன. அவற்றை புனரமைக்க திட்டங்கள் எதுவும் இல்லை.
இதனால் மக்கள் வேலை வாய்ப்பையும், வருமான வாய்ப்பையும் இழந்து வருகின்றனர். மக்களின் வரிப்பணத்தில் நடத்தப்படும் வீணான விழாக்களைப் பற்றியும், ஆடம்பர கார்கள் வாங்கி யுள்ளது பற்றியும் கவர்னர் தன்னிலை விளக்கம் தர வேண்டும்.
மத்திய அரசின் நிதி ஆயோக் ஒரு மாநிலத்தில் நீடித்த நிலைத்த வளர்ச்சிக்கான 13 குறிக்கோள்களை அறிவித்து உள்ளது. அதில் ஏதாவது ஒரு குறிக்கோளை புதுவை அரசு இதுவரை அடைந்துள்ளதா? 11 ஆண்டுகளாக முழு நிதி நிலை அறிக்கையை குறித்த நேரத்தில் சமர்ப்பிக்கவில்லை. கவர்னர் எத்தனை புதிய திட்டங்களையும்அதற்கான நிதியையும் புதுவைக்கு பெற்றுத்தந்தார்? திட்டங்கள் அடிக்கல் நாட்டப்பட்டு 5,10 ஆண்டுகளாகியும் முடிவடை யாத ஒரு விசித்திரமான சூழ்நிலை புதுவையில் மட்டுமே உள்ளறது. வளர்ச்சி என்பது மந்திரத்தால் உருவாவது இல்லை.
தொலைநோக்கு பார்வை, நேர்மையான சிந்தனை, புதுவை பொருளாதாரம் பற்றி நுணுக்கமான புரிதல், துறைகளுக்கு இடையேயான தொடர்புகள், சரியான திட்டங்கள், போதிய நிதி, உள்ளாட்சி அமைப்புகளின் பங்கேற்பு ஆகியவை அவசியம். இவற்றை உருவாக்குவதில் கவர்னர் முனைப்பு காட்டவேண்டும்.
புதுவைக்கு மாநில அந்தஸ்து, நியாயமான உரிய நிதி உதவியையும் மத்திய அரசிடமிருந்து கவர்னர் பெற்றுத்தர வேண்டும். இதன் மூலமே புதுவையின் சரித்திரத்தில் கவர்னர் நிரந்தர இடத்தை பெறுவார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்