உள்ளூர் செய்திகள்
விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள புளி.

திருக்கனூரில் புளி விற்பனை அமோகம்

Published On 2022-04-28 14:30 IST   |   Update On 2022-04-28 14:30:00 IST
திருக்கனூர் பகுதியில் புளி அமோக விற்பனை செய்யப்படுகிறது.
புதுச்சேரி:

திருக்கனூர் பகுதியில் புளி விற்பனை சூடு பிடித்துள்ளது. விலை குறைவு என்பதால் பொதுமக்கள் அதிகளவில் தங்கள் வீடுகளுக்கு வாங்கிச் செல்கின்றனர்.

 திருக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமையலுக்கு பயன் படக்கூடிய புளியின் விளைச்சல் இவ்வாண்டு அதிக அளவில் உள்ளது.

திருக்கனூர் அருகே உள்ள கொ. மணவெளி கிராமத்தில் உள்ள வியாபாரிகள் அதிகளவில் கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மொத்தமாக புளியினை கொள்முதல் செய்து தங்கள் வீட்டு வாசல்களில் கடை போல் அமைத்து சில்லறை விற்பனையில் பொதுமக்களுக்கு வியாபாரம் செய்கிறார்கள்.

தற்போது புளி விளைச்சல் சீசன் என்பதால் திருக்கனூர் பகுதியில் புளி வாங்க பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் புளி விற்பனை இங்கு சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

சென்ற ஆண்டு ரூ.70- க்கு விற்கப்பட்ட கொட்டை எடுக்காத புளி தற்போது விலை குறைந்து ரூ.55-க்கு விற்க்கப்படுகிறது.

கையால் ஆயப்பட்ட கொட்டை எடுத்த புளி ரூ.  130-க்கு விற்கப்படுகிறது. கடைகளில் விற்கப்படும் புளி பெரும்பாலும் இயந்திரத்தால் கொட்டை எடுக்கப்பட்டு விற்க்கப்படுகிறது. ஆனால் இங்கு கைகளால் புளி ஆயப்பட்டு கொட்டை எடுக்கப்படுவதால் சுத்தமாக இருக்கிறது என்ற காரணத்திற்காக பொதுமக்கள் ஓ்ரு ஆண்டுக்கு தேவையான புளிகளை மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்கிறார்கள்.

சிலர் வெளியூரில் உள்ள தங்களது உறவினர்களுக்கு 10 கிலோ, 20 கிலோ என அதிகளவில் புளியை வாங்கி கொடுத்து அனுப்புகிறார்கள். திருக்கனூர் பகுதி மட்டும் அல்லாமல் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் திருக்கனூர், கொ.மணவெளி உள்ளிட்ட பகுதிகளில் புளியை ஆர்வமுடன் அதிகளவில் வாங்கி செல்கிறார்கள். 

இதனால் இங்கு விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

Similar News