உள்ளூர் செய்திகள்
கார் டிரைவர் ரெயிலில் பாய்ந்து தற்கொலை
மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் கார் டிரைவர் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
புதுச்சேரி:
வில்லியனூர் அடுத்த சோம்பட் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி மகன் செல்வம் (வயது 39).
இவர் புதுவையில் உள்ள தனியார் டிராவல்ஸில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கும் திருவண்டார் கோவிலை சேர்ந்த கலைவாணிக்கும் திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்பத்தில் பிரச்சினை ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது.
கடந்த சில மாதங்களாக கலைவாணி திருவண்டார் கோவில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் மகள்களுடன் வசித்து வந்தார். டிரைவர் செல்வம் தனியாக இருந்தார். இந்நிலையில் இரு வீட்டினரும் தம்பதியருக்கு அறிவுரை கூறி இருவரையும் சேர்த்து வைத்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு செல்வத்துடன் வாழ வந்த கலைவாணி மீண்டும் ஏற்பட்ட தகராறில் திருவண்டார் கோவிலுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மனம் வேதனை அடைந்த செல்வம் நேற்று வில்லியனூர்-கூடப்பாக்கம் சாலையில் பட்டாணிகளம் என்ற பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தின் ஓரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது விழுப்புரத்தில் இருந்து புதுவை நோக்கி ரெயில் வந்தது. ரெயில் வருவதால் ரெயில்வே கேட் மூடப்பட்டது. இதனால் இரண்டு புறமும் வாகனத்தில் வந்தவர்கள் காத்திருந்தனர்.
ரெயில்வே தண்ட வாள த்தை ஒட்டி நிறைய குடியிருப்புகளும் உள்ளது. இந்நிலையில் செல்வம் ரெயிலை நோக்கி வேகமாக நடந்து சென்றார்.
வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளப் போவதை உணர்ந்த பொதுமக்கள் அனைவரும் ஒருசேர சத்தம் போட்டுள்ளனர். அதனை காதில் வாங்காமல் வேகமாக வந்த ரெயில் முன் செல்வம் பாய்ந்தார். இதில் தூக்கி வீசப்பட்டு செல்வம் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வில்லியனூர் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் ராமு தலைமையிலான போலீசார் வந்து செல்வத்தின் உடலை மீட்டு கதிர்காமம் அரசு பொது ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக செல்வத்தின் மனைவி கலைவாணி கொடுத்த புகாரின் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.