உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கடலில் குதித்து முதியவர் தற்கொலை

Published On 2022-04-26 10:03 IST   |   Update On 2022-04-26 10:03:00 IST
நோய் கொடுமையால் முதியவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:

புதுவை அருகே தமிழக பகுதியான பிள்ளைச்சாவடி கிழக்கு கடற்கரை சாலையை சேர்ந்தவர் முனுசாமி(வயது62). இவர் அரவிந்தர் ஆசிரமத்தில் ஊழியராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

இவருக்கு இருதய கோளாறு இருந்து வந்தது. இதற்காக 2 முறை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் முனுசாமி இந்த நோயினால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவருக்கு நோய் பாதிப்பு அதிகமாக இருந்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த முனுசாமி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அப்பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்ற முனுசாமி திடீரென கடலில் குதித்தார். 

அப்போது அங்கு யாரும் இல்லாததால் நீரில் மூழ்கி சிறிது நேரத்தில் அருகில் உள்ள புதுவை பகுதியில் அவரது உடல் கரை ஒதுங்கியது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் காலாப்பட்டு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம்  மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கிருமாம்பாக்கம் அருகே கன்னியக்கோவில்&மணப்பட்டு மெயின் ரோட்டை சேர்ந்தவர் ரமேஷ்(50). கூலி தொழிலாளி. இவருக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

ரமேசுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நுரையீரல் பிரச்சினை இருந்து வந்தது. இதற்காக அவர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். மேலும் அவருக்கு நரம்பு தளர்ச்சி நோயும் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில்  ரமேசுக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த ரமேஷ் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் அனைவரும் தூங்கிய பின்னர் மின்விசிறி கொக்கியில் வேட்டியால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது மனைவி விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News