உள்ளூர் செய்திகள்
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை விவசாயிகள் முற்றுகையிட்ட காட்சி.

ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

Published On 2022-04-23 09:28 IST   |   Update On 2022-04-23 09:28:00 IST
ஒழுங்குமுறை விற்பனை கூடத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் விளை பொருட்களுக்கு பணம் தராமல் இழுத்தடிப்பதாக குற்றச்சாட்டு உள்ளனர்.
புதுச்சேரி:

புதுவை தட்டாஞ்சாவடியில் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. 

புதுவையை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் விளையும் உளுந்து, பச்சைப் பயறு, காராமணி, மணிலா, கம்பு, நெல், உள்ளிட்டவற்றை  கொள்முதல் செய்வது வழக்கம். 

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அரசே நேரடியாக கொள்முதல் செய்யாமல் அரசு அனுமதி பெற்ற வியாபாரிகள் விவசாய விளை பொருட்களை மொத்தமாக கொள்முதல் செய்து வருகின்றனர்.

அப்படி கொள்முதல் செய்யும் விளை பொருட்களுக்கு வியாபாரிகள் உடனடியாக பணம் வழங்குவதில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் கொள்முதல் செய்யப்படும் விளை பொருட்களுக்கு மாதக்கணக்கில் இழுத்தடித்த பிறகே பணம் வழங்குவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

மேலும், விவசாயிகளுக்கு வழங்கப்படும் பணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று தெரிவித்ததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது விவசாயிகள் தரப்பில்,கடன் வாங்கி விவசாயம் செய்து விளை பொருட்களை மார்க்கெட் கமிட்டிக்கு கொண்டு வந்தால்  அதிகாரிகள் உரிய பணத்தை வழங்காமல் இழுத்தடிப்பு செய்கின்றனர் மேலும் சிறிய தொகையை கூட வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று சொல்கிறார்கள். ஆனால், மாதக்கணக்கில் வங்கியில் பணம் வந்து சேர்வதில்லை என புகார் செய்தனர்.

விளை  பொருட்களை மார்க்கெட் கமிட்டிக்கு எடுத்துவர வாகன கட்டணங்கள் செலுத்த வேண்டி உள்ளதால் உடனடியாக கையில் பணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனை அடுத்து வரும் திங்கட்கிழமை முதல் பணம் பட்டுவாடா செய்யப்படும் என்று மார்க்கெட் கமிட்டி சார்பில் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

Similar News