உள்ளூர் செய்திகள்
ரோட்டின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் மோதி நிற்கும் அரசு பஸ்.

திண்டல் அருகே ஓடும் பஸ்சில் டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் பரபரப்பு

Published On 2022-04-09 13:30 IST   |   Update On 2022-04-09 13:30:00 IST
ஈரோடு மாவட்டம் திண்டல் அருகே இன்று காலை ஓடும் பஸ்சில் டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் ரோட்டின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் பஸ்சை மோதி நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ஈரோடு:

சேலத்தில் இருந்து ஈரோடு வழியாக திருப்பூர் நோக்கி இன்று காலை ஒரு அரசு பஸ் வந்தது. பஸ்சை ராசிபுரத்தைச் சேர்ந்த பழனிச்சாமி (45) என்பவர் ஓட்டி வந்தார். அந்த பஸ் ஈரோடு பஸ் நிலையத்திற்கு வந்து அடைந்தது.

பின்னர் பஸ் ஈரோட்டில் பயணிகளை ஏற்றிக் கொண்டு திருப்பூருக்கு புறப்பட்டது. பஸ் ஈரோடு திண்டல் அருகே காலை 8.30 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் சுமார் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது டிரைவர் பழனிச்சாமிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவர் நெஞ்சை பிடித்துக்கொண்டு வலியால் துடித்தார்.

பஸ் திடீரென தாறுமாறாக ஓடத் தொடங்கியது. பஸ்சில் இருந்த பயணிகள் என்ன ஏதுவென்று தெரியாமல் கூச்சல் போடத் தொடங்கினர். அப்போதும் சாமர்த்தியமாக செயல்பட்ட டிரைவர் பழனிச்சாமி ரோட்டின் நடுவே இருந்த தடுப்பு சுவரில் பஸ்சை மோதி நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

பஸ்சில் இருந்த பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை.

இதுகுறித்து தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வலியால் துடித்த பஸ் டிரைவர் பழனிச்சாமியை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து நடந்த பகுதி வழியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் வந்தார். அப்போது அவர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டார்.

அங்குள்ள ஒரு போலீஸ்காரரை அழைத்து பஸ்சை எடுத்து சாலை ஓரமாக நிறுத்த சொன்னார்.

Similar News