உள்ளூர் செய்திகள்
கிணற்றில் தவறி விழுந்து சிறுமி பலி
சிவகிரி அருகே தாய் கண் முன்னே கிணற்றி தவறி விழுந்து சிறுமி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
சிவகிரி அருகே தாய் கண் முன்னே கிணற்றி தவறி விழுந்து சிறுமி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் டி.புதுப்பாளையம் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (48). இவருக்கு திருமணமாகி 4 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.
சக்திவேல் ஊர் ஊராக குடும்பத்தினருடன் சென்று கரும்பு வெட்டும் கூலி வேலை செய்து வந்தார்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சக்திவேல் தனது மனைவி, கடைசி மகள் பழனியம்மாள் (16) மற்றும் தனது ஊரை சேர்ந்த 25 நபர்களுடன் ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த கந்தசாமி பாளையம் பகுதிக்கு வந்து தங்கி அங்குள்ள ஆலைக்கு கரும்பு வெட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
இதற்காக அவர் குடும்பத் தினருடன் அங்கேயே தங்கி இருந்து வந்தார். சம்பவத் தன்று அந்த பகுதியில் ஒரு தோட்டத்தில் வேலை முடித்துக்கொண்டு தங்கியிருக்கும் இடத்திற்கு வந்தார்.
குடிக்க தண்ணீர் எடுக்க வேண்டி பழனியம் மாள் அவரது தாயுடன் நாசுவன் காட்டு தோட்டம் பகுதியில் உள்ள பொதுக் கிணற்றுக்கு வந்தனர்.
பழனியம்மாள் தனது தாயுடன் சேர்ந்து கிணற்றில் தண்ணீர் எடுக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக மண் சறுக்கி அவர் கிணற்றுக்குள் தவறி விழுந்தார்.
தன் கண் முன்னே மகள் கிணற்றில் விழுவதை கண்டு அவரது தாய் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தனர். அதற்குள் பழனியம்மாள் கிணற்றுக்குள் மூழ்கி விட்டார்.
இது குறித்து சிவகிரி போலீசாருக்கும், கொடுமுடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சிறுமியை பிணமாக மீட்டனர். சிறுமியின் உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் ஊர் மக்கள் கதறி அழுதனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.