உள்ளூர் செய்திகள்
8-ம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது

பெருந்துறை அருகே 8-ம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் கைது

Published On 2022-04-06 12:07 IST   |   Update On 2022-04-06 12:07:00 IST
பெருந்துறை அருகே ஆசை வார்த்தை கூறி 8-ம் வகுப்பு மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர்.
பெருந்துறை:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த காஞ்சிக்கோவில் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த மாணவி திடீரென மாயமாகி விட்டார். இதையடுத்து பெற்றோர் மாணவியின் தோழிகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து மாணவியின் தந்தை காஞ்சிக்கோவில் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் வழக்குப்பதிவு செய்து மாயமான மாணவியை தேடி வந்தார்.

இந்த நிலையில் போலீசார் பெத்தாம்பாளையம் நால்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அதில் மாயமான மாணவி மற்றும் 2 வாலிபர்கள் இருந்தனர்.

தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரித்தனர். இதில் அவர்கள் பெயர் கார்த்திக், கோபால கிருஷ்ணன் என்பதும் கார்த்திக் அந்த மாணவியை கடத்தியதும் இதற்கு உடந்தையாக அவரது நண்பர் கோபால கிருஷ்ணன் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அந்த மாணவியை போலீசார் மீட்டனர்.

இதை தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரித்தனர். அப்போது காஞ்சிக்கோவில் பகுதியில் உள்ள ஒரு புத்தககடைக்கு சென்று வரும் போது அந்த மாணவிக்கும் கார்த்திக்குக்கும் பழக்கம் ஏற்பட்டது தெரிய வந்தது. பின்னர் அவர்கள் அடிக்கடி போனில் பேசி பழகி வந்தனர்.

இதை அறிந்த மாணவியின் பெற்றோர் கண்டித்தனர். இதனால் கார்த்திக் அந்த மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று கொளப்பலூர் குதிரைகள் பாளையம் மாரியம்மன் கோவிலில் அந்த மாணவியை திருமணம் செய்து கொண்டதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

இது குறித்து கார்த்திக் மற்றும் கோபாலகிருஷ்ணன் மீது மாணவியை கடத்தியது, கடத்தலுக்கு உதவி செய்தல், திருமணம் செய்தல், கட்டாயப்படுத்தி குழந்தை திருமணம் செய்தல், போன்ற பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த நீதிபதி சபீனா இருவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து இருவரும் பெருந்துறை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

Similar News