உள்ளூர் செய்திகள்
பள்ளியில் இடையில் நின்ற மாணவர்களை நேரில் சந்தித்த கல்வி அதிகாரி

தியாகதுருகம் அருகே பள்ளியில் இடையில் நின்ற மாணவர்களை நேரில் சந்தித்த கல்வி அதிகாரி

Published On 2022-04-03 17:00 IST   |   Update On 2022-04-03 17:00:00 IST
தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து இடையில் நின்ற மாணவர்களின் வீட்டுக்கு சென்ற கல்வி அதிகாரி மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களை சந்தித்து பேசினார்.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 6 -ம் வகுப்பு முதல் 12 - ம் வகுப்பு வரை சுமார் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்தப் பள்ளியில் படித்த மாணவர்கள் சுமார் 100 பேர் சூழ்நிலையின் காரணமாக பள்ளிக்கு வராமல் இடையில் நின்று விட்டனர். இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இதனைக்கருத்தில் கொண்ட மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் பள்ளியில் இடையில் நின்ற மாணவர்களை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்து வர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி தியாகதுருகம் அருகே உள்ள பல்லகச்சேரி கிராமத்திற்கு சென்றார். அங்கு தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்து இடையில் நின்ற மாணவர்களின் வீட்டுக்கு சென்று மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களை சந்தித்து பேசினார்.

அப்போது என்ன காரணத்தால் மாணவர் பள்ளி படிப்பை இடையில் நிறுத்தினர். குடும்ப சூழ்நிலை காரணமா? மாணவர்கள் வேலைக்கு செல்கிறார்களா? என்பது குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர்களிடம் தங்கள் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கைக்கு படிப்பு மிகவும் அவசியம். எனவே மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வையுங்கள் என அறிவுரை வழங்கினார். இதில் 6 மாணவர்களின் பெற்றோர்கள் மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்தனர்.

அப்போது பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும், யூனியன் துணைத்தலைவருமான நெடுஞ்செழியன், பேரூராட்சி துணை தலைவர் சங்கர், வார்டு கவுன்சிலர்கள் ராஜசேகர், சிலம்பரசன், ஜெயசித்ரா அருட்செல்வன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் முருகன், ஊராட்சி மன்ற தலைவர் சின்னதுரை உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.

Similar News