உள்ளூர் செய்திகள்
ஈரோட்டில் இன்று டாக்டர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
ஈரோடு:
ஈரோட்டில் இன்று டாக்டர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த டாக்டர் அர்ச்சனா சர்மா கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக வந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்து உள்ளார். ஆனால் அதிக ரத்த போக்கு காரணமாக அந்த கர்ப்பிணி பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதையடுத்து ராஜஸ்தான் போலீசார் அந்த பெண் டாக்டர் மீது கொலை வழக்குப் பதிவு செய்தனர். இதனால் மனவேதனை அடைந்த அந்த பெண் டாக்டர் ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது நாடு முழுவதும் கடும் அதிர் வலைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்திற்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்தது. மேலும் பெண் டாக்டர் தற்கொலைக்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று நாடு முழுவதும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி ஈரோடு மாவட்ட இந்திய மருத்துவ சங்கம் சார்பில் காளைமாடு சிலை அருகே இன்று காலை தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணை தலைவர் சி.என்.ராஜா தலைமை தாங்கினார். மாநிலத் தலைவர் அப்துல் ஹாசன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட தலைவர் விஜயகுமார் உள்பட நூற்றுக்கணக்கான டாக்டர்கள் தர்ணா போராட்டத்தில் பங்கேற்று பெண் டாக்டர் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணைத் தலைவர் சி.என்.ராஜா நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ராஜஸ்தானில் பிரசவத் திற்காக சேர்க்கப்பட்ட பெண் அதிக ரத்தப் போக்கு காரணமாக இறந்துவிட்டார். இதற்கு அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்த்த பெண் டாக்டர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். இதனால் அந்தப் பெண் டாக்டர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இது ஒரு மோசமான செயலாகும்.
நாடு முழுவதும் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் இதை கண்டித்து தர்ணா போராட்டம் நடைபெற்று வருகிறது. மருத்துவர்கள் நோயாளியை காப்பாற்று வதற்காக தான் இருக்கிறார் களே தவிர அவர்களை கொள்வதற்கு இல்லை. ராஜஸ்தான் போலீசார் அந்த பெண் டாக்டரை ஒரு கொலையாளி, கிரிமினல் போல கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அந்த பெண் டாக்டர் 2 குழந்தைகளின் தாய். திறமையான மருத்துவர். அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு சென்றுள்ளார். அதில் நான் ஒரு மருத்துவராக எனது கடமையை சரியாக தான் செய்திருந்தேன். இருந்தாலும் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். இந்த முடிவு வேறு எந்த டாக்டருக்கும் வரவேண்டாம். என் இறப்புக்கு பின்னால் எனது குழந்தைகளையும் கணவரையும் தொந்தரவு செய்யாதீர்கள் என்று கடிதம் எழுதியுள்ளார்.
மருத்துவர்கள் இரவு பகல் என்று பார்க்காமல் சேவை செய்து வருகிறார்கள். பிரசவத்தின் போது இறப்பு சில சமயம் ஏற்பட்டு விடுகிறது. அதிக ரத்தப் போக்கு காரணமாக இது ஏற்படுகிறது. 2013 வது வருடம் பிரசவ இறப்பு 250 ஆக இருந்தது. அது தற்போது 113 ஆக குறைந்துள்ளது.
அந்த பெண் மருத்துவர் தற்கொலைக்கு காரணமான அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சம்பந்தமாக இந்திய மருத்துவ சங்கம் சார்பில் பிரதமரை சந்திக்க உள்ளோம். இதேப்போல் அந்தந்த மாநில மருத்துவ சங்கம் மூலம் அந்தந்த மாநில முதல்-அமைச் சரையும் சந்திப்போம்.
அப்போது மருத்துவ மனை பாதுகாப்புச் சட்டம் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்துவோம். இந்தியாவில் உள்ள 21 மாநிலங்களில் இந்த சட்டம் இருந்தாலும் அவை முறையாக நடைமுறை ப்படுத்தப் படவில்லை. இதனால் அவ்வப்போது மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனையை தாக்கும் சம்பவம் நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.