உள்ளூர் செய்திகள்
முதல்வருடன் மாணவர் சந்திரன்

வேளாண் கல்லூரியில் சேர்ந்த பழங்குடியின மாணவர்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார்

Published On 2022-03-31 18:03 IST   |   Update On 2022-03-31 18:03:00 IST
கால்நடை மருத்துவ பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியலில் பழங்குடி பிரிவில் முதலாவது இடத்தில் சந்திரன் இருந்தார். இருப்பினும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதி சுண்டப்போடு பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் உடுமுட்டு. இவரது மகன் சந்திரன் (21). குழந்தை தொழிலாளியாக மாடு மேய்த்து கொண்டிருந்த சந்திரனை அதிகாரிகள் மீட்டு குழந்தை தொழிலாளர்களுக்கான சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். அங்கு 2 ஆண்டுகள் படித்த அவர் பர்கூர் மலைப்பகுதி குன்றி கிராமத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படித்தார்.

பின்னர் கோபிசெட்டிபாளையம் வைரவிழா மேல்நிலைப்பள்ளியில் வேளாண்மை செயல்பாடுகள் தொழிற்பாடப்பிரிவில் சேர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு படித்து முடித்தார். சுண்டப்போடு கிராமத்தில் இருந்து இதுவரை ஒருவர் கூட கல்லூரி படிப்பில் சேராத நிலையில் முதல் நபராக பிளஸ்-2 முடித்ததும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துக்கும், தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்துக்கும் சந்திரன் விண்ணப்பித்து இருந்தார்.

கால்நடை மருத்துவ பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசை பட்டியலில் பழங்குடி பிரிவில் முதலாவது இடத்தில் சந்திரன் இருந்தார். இருப்பினும் அவருக்கு கால்நடை மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் வேளாண்மை பல்கலைக்கழகத்திலும் இடம் கிடைக்கவில்லை.

இதையடுத்து குடும்ப வறுமையால் சந்திரன் மாடு மேய்த்து கொண்டிருந்தார். நடப்பாண்டு மீண்டும் சந்திரன் கால்நடை மருத்துவ படிப்புக்கும், வேளாண்மை பாடப்பிரிவுக்கும் விண்ணப்பித்து இருந்தார். இந்த நிலையில் முதல்-அமைச்சர் அலுவலகத்தில் இருந்து சந்திரனுக்கு அவசர தகவல் கிடைத்துள்ளது. அதில் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கத்துக்கு நேரில் வருமாறு தெரிவித்து இருந்தனர்.

அங்கு சென்றபோது சந்திரனுக்கு வேளாண்மை பாடப்பிரிவில் (சுயநிதி) இடம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடலில் உள்ள ஒரு தனியார் வேளாண் கல்லூரியில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து மாணவர் சென்னை தலைமை செயலகத்தில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

நான் பிளஸ்-2 வில் வேளாண்மை செயல்பாடுகள் தொழிற் பாடப்பிரிவில் 444 மதிப்பெண்கள் பெற்றிருந்தேன். இதையடுத்து உயர்கல்வி பயில தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்திலும், கால்நடை மருத்துவ படிப்பிலும் சேர விண்ணப்பித்தேன். ஆனால் இடம் கிடைக்கவில்லை.

பிளஸ்-2 அறிவியல் பாடப்பிரிவில் படித்த மாணவர்களுக்கு வேளாண்மை, கால்நடை பல்கலைக்கழகங்களில் 95 சதவீத ஒதுக்கீடும், தொழிற்கல்வி படித்த மாணவர்களுக்கு வெறும் 5 சதவீதம் மட்டுமே சேர்க்கைக்கான ஒதுக்கீடு அளிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து அறிவியல் பாடப்பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு 50 சதவீதம், வேளாண்மை தொழிற்பிரிவு பாடப்பிரிவு மாணவர்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு என்ற அடிப்படையில் வேளாண்மை, கால்நடை மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கையை நடத்த அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.

மேலும் இது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்திலும் மனு கொடுக்கப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து மனு அளித்தேன். அப்போது அவர் சட்ட ரீதியாக உதவுவதாக தெரிவித்தார். இறுதிவரை உனக்கு துணை இருப்பேன் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு நான் விண்ணப்பித்து இருந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் வேளாண்மை பாடப்பிரிவில் சுயநிதி கல்லூரியில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தமிழ்நாடுவேளாண்மை பல்கலைக்கழகத்தில் 5 சதவீத இட ஒதுக்கீடு உண்டு. ஆனால் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள தனியார் கல்லூரிகளில் 5 சதவீத இட ஒதுக்கீடு கடைப்பிடிப்பது இல்லை. என்னைபோல பல மாணவர்கள் பயன்பெறும் வகையில் தனியார் கல்லூரிகளிலும் 5 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் தொழிற்பாடப்பிரிவில் படிப்பவர்களுக்கு கூடுதலாக 140 இடங்கள் கிடைக்கும். மேலும் இந்த ஆண்டு முதல் வேளாண் பல்கலைக் கழகத்தில் தமிழ்வழி பிரிவும் தொடங்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகள் காத்திருந்த நிலையில் எனது வேளாண் கல்வியை நனவாக்கிய முதல்-அமைச்சர் மற்றும் எனக்காக போராடிய சுடர் அமைப்பினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு மாணவர் சந்திரன் கூறினார்.

Similar News