உள்ளூர் செய்திகள்
குண்டத்துக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய விறகுகள்.

அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா

Published On 2022-03-30 13:32 IST   |   Update On 2022-03-30 13:32:00 IST
2 ஆண்டுகளுக்கு பின்பு அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
அந்தியூர்:

2 ஆண்டுகளுக்கு பின்பு அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

அந்தியூர் பஸ் நிலையம் அருகே புகழ்பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதம் குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பண்டிகை நடைபெறவில்லை.

இந்த நிலையில் இந்த ஆண்டு கடந்த 17-ந் தேதி பூச்சாட்டுதலுடன் பண்டிகை தொடங்கியது. இதனை தொடர்ந்து மகிஷாசுர வதம் எனும் எருமைக்கிடாய் வெட்டும் நிகழ்வும், 29-ந் தேதி கிராம சாந்தி நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதனையடுத்து குண்டம், தேர்த்திருவிழா கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது. இன்றைய தினத்திலிருந்து அம்மன் பூத வாகனம், நரி வாகனம், சிம்ம வாகனம், ஹம்ச வாகனம், யானை வாகனம், சட்டத்தேர் புஷ்ப பல்லாக்கு வாகனங்களில் தினந்தோறும் வீதி உலா அந்தியூர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.

தொடர்ந்து ஏப்ரல் மாதம் 6-ந் தேதி காலை குண்டம் திருவிழா நடைபெறும். இதில் அந்தியூர், சங்கராபாளையம், புதுப்பாளையம், தவிட்டுப்பாளையம், சின்னத்தம்பிபாளையம், எண்ணமங்கலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து குண்டம் இறங்குவார்கள். குண்டம் திருவிழாவிற்காக பக்தர்கள் நேர்த்திகடனாக விறகுகளை குவித்து வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து 8-ந் தேதி மாலை தேர் திருவிழா தொடங்கி 11-ந் தேதி வரை அம்மன் முக்கிய வீதிகள் வழியாக உலா வந்து மாலை தேர் நிலையை வந்து அடையும். அதனைத்தொடர்ந்து 12-ந் தேதி பரிவேட்டை வெகு விமர்சையாக நடைபெறும். 13-ந் தேதி வசந்தோற்சவம் நிகழ்ச்சியுடன் பண்டிகை நிறைவடையும்.

Similar News