உள்ளூர் செய்திகள்
மழைக்கு சேதமான வாழைகள்.

தாளவாடியில் ஆலங்கட்டி மழை- சூறாவளி காற்றில் 900 வாழைகள் சேதம்

Published On 2022-03-30 09:59 IST   |   Update On 2022-03-30 09:59:00 IST
தாளவாடி திகினாரை, அருள்வாடி, மெட்டல் வாடி,தொட்டகாஜனூர், ஜுர்கள்ளி, பனக்கள்ளி, ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. பனக்கள்ளி கிராமத்தில் மழை நீருடன் கழிவுநீரும் கலந்து சாலையில் சென்றதால் பொதுமக்கள் கடும் அவதிபட்டனர்.

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் தாளவாடி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வருகிறது. அவ்வப்போது சில கிராமங்களில் மழையும் பெய்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டமாக காணப்பட்டது. முதலில் சாரல் மழையாக ஆரம்பித்து பின்னர் பலத்த மழையாக ஒரு மணி நேரம் சூறாவளிக் காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது.

தாளவாடி திகினாரை, அருள்வாடி, மெட்டல் வாடி,தொட்டகாஜனூர், ஜுர்கள்ளி, பனக்கள்ளி, ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. பனக்கள்ளி கிராமத்தில் மழை நீருடன் கழிவுநீரும் கலந்து சாலையில் சென்றதால் பொதுமக்கள் கடும் அவதிபட்டனர்.

சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ஜீர்கள்ளி,தொட்டமுதிகரை, கிராமத்தில் 20 ஏக்கர் பரப்பளவு உள்ள கரும்பு பயிர்கள் மண்ணில் சாய்ந்தது.

அதேப்போல தொட்டகாஜனூர் கிராமத்தில் அனுமையன் (35) என்பவர் தோட்டத்தில் 400 நேந்திரம் வாழையும், குமார் என்பவர் தோட்டத்தில் 500 வாழையும் சாய்ந்து சேதமானது. அதேபோல் தாளவாடியில் இருந்து தொட்டகாஜனூர் செல்லும் சாலை அண்ணா நகர் அருகே சாலையோரத்தில் இருந்த பழமையான மரம் சாலையில் முறிந்து விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் மரத்தை பொக்லைன் மூலம் மரத்தை அகற்றினர் இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News