உள்ளூர் செய்திகள்
விபத்து

மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து- போலீஸ்காரர் உயிரிழப்பு

Published On 2022-03-27 16:57 IST   |   Update On 2022-03-27 16:57:00 IST
தியாகதுருகம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் போலீஸ்காரர் உயிரிழந்தார்.
கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி அருகே ஏரவார் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ். இவரது மகன் குமரவேல் (வயது 29). இவர் உளுந்தூர்பேட்டையில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் 10ம் அணியில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.

இவர் ஒரு மோட்டார் சைக்கிளிலும், இவருடன் பணிபுரிந்து வந்த நண்பர்களான திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் அருகே கருங்காலி குப்பத்தை சேர்ந்த கலைவாணன் (30) மற்றும் சங்கராபுரம் அருகே ஆலத்தூர் பகுதியை சேர்ந்த கார்த்தி (32) ஆகிய போலீஸ்காரர்கள் ஆகியோர் 2 மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டையில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அவர்கள் மாடூர் தனியார் பால் பண்ணை அருகே சென்றபோது முன்னால் சென்ற கார் திடீரென பிரேக் பிடித்து இடதுபக்கமாக திரும்பியதால் குமரவேல் மோட்டார் சைக்கிளும் கார்த்திக் மற்றும் கலைவாணன் ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள்களும் கார் மீது மோதியது. இதில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குமரவேல் இறந்து போனார். மற்ற 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதுகுறித்து கார்த்தி கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் கார் டிரைவரான பெரம்பலூர் மாவட்டம், அம்மா பாளையம், வள்ளிமலையைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரின் மகன் ஆனந்த ராஜ் (22) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News