அந்தியூரில் நண்பரை கழுத்தை நெரித்து கொலை செய்த வாலிபர் கைது
அந்தியூர்:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாளபாளையத்தை சேர்ந்தவர் சதீஷ் (வயது 32). வேன் டிரைவர். இவர் அந்தியூர் தவிட்டுபாளையம் அருகே கடந்த 21-ந் தேதி இரவு டாஸ்மாக் மதுக்கடை அருகே உள்ள சாக்கடையில் பிணமாக கிடந்தார்.
சதீஷ் சாவில் மர்மம் இருப்பதாகவும், அவரை யாரோ கொலை செய்து விட்டதாகவும் உறவினர்கள் புகார் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இது தொடர்பாக பல்வேறு வதந்திகள் பரவியதால் அந்தியூர் பகுதியில் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில் சதீஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவு நேற்று வெளிவந்தது. இதில் சதீஷ் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது உறுதியானது.
இது குறித்து அந்தியூர் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது கொலை நடந்த நாளில் கடைசியாக சதீஷ் மொடச்சூரை சேர்ந்த தனது நண்பர் கார்த்திக் (26) என்பவருடன் சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர். மேலும் சதீஷ் இறந்த நாளிலிருந்து கார்த்திக் செல்போன் நம்பர் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மேலும் அவர் தலைமறைவாக இருந்தார்.
இதனால் அந்தியூர் போலீசார் கார்த்திக்கை பிடிக்க தீவிரம் காட்டி வந்தனர். இந்நிலையில் நேற்று அந்தியூர் பகுதியில் பதுங்கியிருந்த கார்த்திக்கை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சதீசை கொன்றதை கார்த்திக் ஒப்புக்கொண்டார்.
போலீஸ் விசாரணையில் கார்த்திக் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
நானும், சதீசும் நண்பர்கள். சம்பவ நாளன்று சதீஷ் எனக்கு சொந்தமான வேனை வாங்கி ஓட்டி சென்றார். அப்போது அவர் குடிபோதையில் இருந்துள்ளார். நானும் அவருடன் வேனில் சென்றேன்.
அந்தியூர் ரவுண்டானா அருகே என்னை இறக்கிவிட்டு சிறிது நேரத்தில் வருகிறேன் என்று கூறி வேனை ஓட்டி சென்றார். ஆனால் திரும்பி வரவில்லை. இதனால் நான் அந்த பகுதியில் நடந்து சென்றபோது அங்கு ஒரு பகுதியில் கூட்டமாக இருந்தது. நான் அங்கு சென்று பார்த்தபோது சதீஷ் குடிபோதையில் வேனை தாறுமாறாக ஓட்டி 3 பேர் மீது மோதுவது போல் சென்று நிறுத்தியுள்ளார். இதனால் அங்கிருந்தவர்கள் சதீஷ் மற்றும் வேனை பிடித்து வைத்து கொண்டனர்.
நான் சென்று வேனை கேட்ட போது நாளை காலை வந்து எடுத்து கொள்ளுங்கள் என்று கூறி விட்டனர். இதனால் எனக்கு சதீஷ் மீது ஆத்திரம் ஏற்பட்டது. பின்னர் நானும் சதீசும் தொட்டிபாளையத்தில் உள்ள டாஸ்மாக் மது கடைக்கு சென்றோம்.
அப்போது ஆத்திரத்தில் உன்னால்தான் என் வேன் அவர்களிடம் சிக்கி விட்டது என்று சதீசிடம் சண்டை போட்டேன். அப்போது ஆத்திரத்தில் சதீஷ் கழுத்தை நெரித்து சாக்கடையில் தள்ளி விட்டடேன். இதில் சதீஷ் இறந்து விட்டார்.
இவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.
இதையடுத்து அந்தியூர் போலீசார் கார்த்திக்கை கைது செய்து பவானி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர் அவர் கோபிசெட்டிபாளையம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.