நூல்-பெட்ரோல், டீசல் அதிகரிப்பால் ஜவுளி விலை உயர்ந்து கோடை விற்பனை பாதிப்பு
ஈரோடு:
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே கனி மார்க்கெட் (ஜவுளி சந்தை) மொத்த, சில்லரை விற்பனை கடைகள் உள்ளன. இங்கு 280 கடைகளும், அதனை சுற்றி, பல நூறு ஜவுளி மொத்த விற்பனை கடைகள், குடோன் விற்பனை, வாகனங்களில் வைத்து விற்பனையும் நடக்கிறது.
கடந்த, 20 நாட்களுக்கு மேலாக கோடை ஜவுளி விற்பனை தொடங்கி நடந்து வருகிறது. ஆனால், ஜவுளி விலை உயர்வால் மொத்த வியாபாரம், சில்லரை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து கனி மார்க்கெட் தினசரி கடை வியாபாரிகள் சங்க தலைவர் நூர்சேட் கூறியதாவது:-
கொரோனா கட்டுப்பாடு முதல் ஜவுளி உற்பத்தியும் பாதித்து, விற்பனையும் குறைந்தது. தற்போது தளர்வுகள் நீங்கி முழுமையாக கடைகள் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் நூல் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து வகையான ஆடைகளின் விலையும் உயர்ந்துள்ளன.
உதாரணமாக ஆண்களுக்கான சட்டை 20 ரூபாயும், லுங்கி 8 முதல் 10 ரூபாயும், வேட்டி 5 முதல், 10 ரூபாயும், புடவை 30 ரூபாய், பேண்ட் 30 ரூபாய், பனியன், ஜட்டிகள் ஒரு டஜன் 20 முதல் 50 ரூபாயும், சற்று உயர்ந்த ரக ஜட்டி, பனியன்கள் 60 முதல் 70 ரூபாயும், கவுன் 30 முதல் 70 ரூபாயும் உயர்ந்துள்ளது.
அதுபோல நைட்டி, உள்ளாடைகள், மெத்தை விரிப்பு போர்வை போன்றவையும் விலை உயர்ந்துள்ளது. கோடைக்கான ஆடை வாங்குவோர் அதனுடன் இணைந்து துண்டு, லுங்கி, வேட்டி, போர்வை போன்றவைகளும் வாங்குவார்கள். விலை உயர்வால், வாங்குவதை குறைத்தும் சிலர் வாங்காமலும் செல்வதால், வியாபாரம் கடுமையாக பாதிக்கிறது.
நூல் விலை உயர்வை கட்டுப்படுத்தவும், பெட்ரோல், டீசல் விலையை சீராக வைக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ஜவுளி தொழில் நலிவடையாமல் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.