உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

85 ஆயிரம் சிறுவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

Published On 2022-03-17 14:59 IST   |   Update On 2022-03-17 14:59:00 IST
ஈரோடு மாவட்டத்தில் 85 ஆயிரம் சிறுவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் 85 ஆயிரம் சிறுவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டது.

முதலில் முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதன் பிறகு 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் 45 வயதுக்கு மேற்பட்ட பொது மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 18 வயதுக்கு மேற் பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக கொரோனா தாக்கம் ஏற்பட்டாலும்  குணமடைந்து வருகின்றனர்.  இந்நிலையில் உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வைரஸ் வேகமாக பரவியதால் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து 12 முதல் 18 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டது. இதில் முதற் கட்டமாக 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்களுக்கு தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஜனவரி மாதம் தொடக்கத்தில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. 
ஈரோடு மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதுடைய சிறுவர்கள் மொத்தம் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 161 பேர் உள்ளனர். இவர்களுக்கு அந்தந்த பள்ளியிலேயே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.  ஈரோடு மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 85,601 சிறுவர்களுக்கு கொரோனா முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

முதல் தவணை தடுப்பூசி செலுத்தி 28 நாட்கள் கடந்த மாணவ&மாணவிகளுக்கு 2&வது தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 15 வயது முதல் 18 வயதுடைய 64 ஆயிரத்து 783 மாணவ&மாணவிகளுக்கு கொரோனா 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். 

இதேப்போல் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் இதுவரை முதல் தவணை தடுப்பூசி 16 லட்சத்து 30 ஆயிரத்து 899 பேர் செலுத்தி கொண்டுள்ளனர். இது 90.15 சதவீதமாகும்.
2-ம் தவணை தடுப்பூசியை இதுவரை மாவட்டத்தில் 12 லட்சத்து 77 ஆயிரத்து 333 பேர் செலுத்தியுள்ளனர். இது 70.61 சதவீதமாகும். 2 தவணை தடுப்பூசிகளையும் சேர்த்து மொத்தம் 29 லட்சத்து 8 ஆயிரத்து 232 பேர் செலுத்தி கொண்டதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முதல் 12 முதல் 14 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இன்று 2&-வது நாளாக அந்தந்த பள்ளிகளில் 12 முதல் 14 வயது சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது.

Similar News