உள்ளூர் செய்திகள்
ஈரோடு மாவட்டத்திற்கு 22-ந் தேதி உள்ளூர் விடுமுறை
பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்திற்கு 22-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக கலெக்டர் கிருஷ்ணனுன்ணி தெரிவித்துள்ளார்.
ஈரோடு:
பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்திற்கு 22-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக கலெக்டர் கிருஷ்ணனுன்ணி தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே பண்ணாரியம்மன் கோவில் குண்டம் விழா பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்து வருகிறது.
சுமார் 2 வருடங்களுக்கு பிறகு குண்டம் விழா நடப்பதால் விழாவை சிறப்பாக நடத்தும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. வரும் 22-ந் தேதி குண்டம் விழா நடைபெறுகிறது. இதில் லட்சக்கணக்கான மக்கள் விரதமிருந்து குண்டம் இறங்குகிறார்கள்.
குண்டம் நாளான வரும் 22-ந் தேதி ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. கல்லூரி, பள்ளிகளில் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப் பட்டிருந்தால், இந்த விடுமுறை பொருந்தாது. முன்கூட்டியே தேர்வுகள் அறிவித்தபடி நடக்கும்.
இவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களும் வரும் 26&ந் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.இவ்விடுமுறை, வங்கிகளுக்கு பொருந்தாது. விடுமுறை நாளில் அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கருவூலம், சார் நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியா ளர்களுடன் செயல்படும்.
வரும், 21, 22, 23 ஆகிய நாட்களில் கோவிலில் குண்டம் மற்றும் மறுபூஜை நடக்க உள்ளது. இதனால் அந்நாட்களில் கோவை, மேட்டுப்பாளையம், திருப்பூர், ஈரோடு, கோபி, கவுந்தப்பாடி, பவானி, சத்தியமங்கலம், புளியம்பட்டி, மைசூரு, நம்பியூர், பவானிசாகர் ஆகிய இடங்களில் இருந்து அரசு போக்குவரத்து கழக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது. சிறப்பு பஸ்களை பொதுமக்கள், பக்தர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
இந்த தகவலை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.