உள்ளூர் செய்திகள்
தற்கொலை

கோபிசெட்டிபாளையம் அருகே பிளஸ்-2 மாணவி தற்கொலை

Published On 2022-03-17 10:29 IST   |   Update On 2022-03-17 10:29:00 IST
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நம்பியூர்:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கோட்டு புள்ளம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். பனியன் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார்.

இவருக்கு யுவராணி, மலர் ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இதில் 2-வது மகள் மலர் (19) கோபிசெட்டிபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

மாணவி மலர் அதிக முன்கோபம் உள்ளவர் எனவே யாரிடமும் எதுவும் பேசாமல் இருந்து வந்தார். சம்பவத்தன்று சீனிவாசன் தனது சித்தப்பாவின் மகன் திருமண நிகழ்ச்சிக்காக பர்கூர் செல்வதற்காக மலரை பள்ளிக்கு செல்ல வேண்டாம் எங்களுடன் வா என கூறி உள்ளார். அதற்கு மலர் நான் வரவில்லை என கூறிவிட்டு கோபித்து கொண்டு சென்று விட்டார்.

இந்நிலையில் கோபத்தில் இருந்த மலர் வீட்டில் உள்ள ஒரு அறையின் உள்ளே சென்று தாழிட்டு கொண்டார்.

இதையடுத்து அவரது அக்காள் யுவராணி மற்றும் அக்கம் பக்கத்தினர் கதவை தட்டினர். ஆனால் மலர் கதவை திறக்கவில்லை. இதையடுத்து வீட்டின் ஓட்டை பிரித்து உள்ளே பார்த்த போது மலர் சேலையால் தூக்கு மாட்டி தொங்கிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே மலரை மீட்டு கோட்டுபுள்ளம் பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மலர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News