மதுராந்தகம் மதுக்கடையில் கொள்ளையை தடுத்த 2 போலீஸ்காரர்கள் மீது தாக்குதல்
மதுராந்தகம்:
மதுராந்தகம் அடுத்த கருங்குழி அருகே உள்ள கீழவளத்தில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. நேற்று இரவு விற்பனை முடிந்ததும் வழக்கம்போல் கடையை மூடிவிட்டு சென்றனர்.
இந்தநிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் மதுராந்தகம் போலீஸ்காரர்கள் ராஜேஷ், சதீஷ் ஆகியோர் இரவு ரோந்து பணியில் இருந்தனர்.
அவர்கள் மதுக்கடை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது 5 பேர் கும்பல் மதுக்கடை முன்பு கும்பலாக நின்று ஷட்டர் பூட்டை உடைத்து கொண்டு இருந்தனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீஸ்காரர்கள் ராஜேஷ், சதீஷ் ஆகிய 2பேரும் விசாரித்தபடி மர்ம கும்பலை பிடிக்க முயன்றனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் திடீரென போலீஸ்காரர்கள் ராஜேஷ், சதீஷ் ஆகியோரை இரும்பு கம்பிகளால் தாக்கி கீழே தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் போலீஸ்காரர்கள் 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதுகுறித்து அவர்கள் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் கொள்ளைகும்பல் தாக்குதலில் காயம் அடைந்த 2 போலீசாரையும் மீட்டு மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
கொள்ளை முயற்சி நடந்த மதுக்கடை அருகே கொள்ளையர்கள் விட்டு சென்ற 2 மோட்டார் சைக்கிள்களை போலீசார் கைப்பற்றினர். அதன் பதிவு எண்ணை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுக்கடையில் நேற்று சுமார் ரூ.1½ லட்சம் வரை மது விற்பனை நடந்து உள்ளது. அந்த பணத்தை ஊழியர்கள் கொண்டு சென்றுவிட்டதாக தெரிகிறது. மதுக்கடையில் அதிக அளவு பணம் இருப்பதை நோட்டமிட்டு கொள்ளை கும்பல் வந்துள்ளனர். சரியான நேரத்தில் போலீசார் வந்ததால் கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
போலீஸ்காரர்களை தாக்கி கொள்ளையர்கள் தப்பி சென்ற சம்பவம் மதுராந்தகம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் கொள்ளையர் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.