உள்ளூர் செய்திகள்
ஆக்கிரமிப்பு அகற்றியதால் விவசாயி தீக்குளிக்க முயற்சி
ஆக்கிரமிப்பு அகற்றியதால் விவசாயி தீக்குளிக்க முயன்றார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே ஆக்கிரமிப்பை அகற்றியதால், விவசாயி ஒருவர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயங்கொண்டத்தை அடுத்த துளாரங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயவேல்(வயது54). இவர், தனது வயலுக்கு அருகே உள்ள பாதையை ஆக்கிரமித்து விவசாயம் செய்துவந்ததாகத் தெரிகிறது.
இதனால், அவ்வழியே செல்லும் மற்ற விவசாயிகளுக்கு இடையூறு ஏற்படுவதாகப் புகார் எழுந்தது. மேலும், பாதை ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி போராட்டங்களையும் அப்பகுதி விவசாயிகள் மேற்கொண்டனர்.
இந்நிலையில், அந்த பாதையை மீட்கும் பொருட்டு காவல் துறையின் உதவியுடன் அளவீடு செய்யும் பணியில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயி ஜெயவேல் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அப்போது, அருகிலிருந்தவர்கள் மீட்டு அவர் மீது தண்ணீர் ஊற்றினர். இதையடுத்து பாதை, எந்திரத்தின் உதவியுடன் மீட்கப்பட்டு விவசாயிகளின் பயன்பாட்டுக்கு விடப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.