உள்ளூர் செய்திகள்
கைது

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 வாலிபர்கள் கைது

Published On 2022-03-15 14:44 IST   |   Update On 2022-03-15 14:44:00 IST
கல்பாக்கம் அருகே சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக 3 வாலிபர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்.
மாமல்லபுரம்:

கல்பாக்கம் பகுதியை சேர்ந்த 17 வயது, 15 வயதுடைய 2 சிறுமிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீடியோ ஒன்றை பதிவிட்டு வெளியிட்டனர். அதில் அவர்கள் அழுதபடி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்து பேசினர்.

அந்த வீடியோவில் சிறுமிகள் பேசும்போது, ‘ஊரை விட்டு தங்களை ஒதுக்கி வைத்திருப்பதாகவும், வீட்டுடன் சேர்த்து எரித்து கொலை செய்து விடுவதாகவும் மிரட்டுகிறார்கள்.

போலீசில் புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நாங்கள் தற்கொலை செய்து கொள்கிறோம்’ என்று கண்ணீருடன் தெரிவித்து இருந்தனர்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது பற்றி விசாரணை நடத்த செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் உத்தரவிட்டார்.

விசாரணையில் வீடியோ வெளியிட்ட சிறுமிகள் தந்தையை இழந்து தாயுடன் வசித்து வருவதும், அதே பகுதியை சேர்ந்த சிலர் அவர்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததும் தெரிந்தது. சாலையில் நடந்து சென்ற போது அவர்கள் கடுமையான தொல்லையை அனுபவித்து உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் வந்த போது சிலர் ஆபாசமான வார்த்தைகளை கூறி உள்ளனர்.

மேலும் சிறுமி தனது தாயுடன் நடந்து சென்ற போது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து இருக்கிறார்கள்.

இது தொடர்பாக சிறுமிகள் போலீஸ் நிலையத்தில் புகார் செய்து இருப்பதும் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்ததும் தெரியவந்தது. இதன் பின்னரே தாங்க முடியாமல் தவித்த சிறுமிகள் வீடியோ வெளியிட்டு கதறி அழுது உள்ளனர்.

இதையடுத்து நேற்று மாலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் சமூக நலத்துறை அதிகாரிகள், மாமல்லபுரம் மகளிர் போலீசார் சிறுமிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களுக்கு பாலியல் ரீதியான தொல்லை நடந்து இருப்பது உறுதியானது. இதையடுத்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அதே பகுதியை சேர்ந்த தினேஷ், எல்லப்பன், கோபாலகிருஷ்ணன் ஆகிய 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

போக்சோ சட்டத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் தினேஷ் கிழக்கு கடற்கரை சாலையில் ஹார்டுவேர்ஸ் கடை வைத்துள்ளார். மேலும் அரசியல் கட்சியிலும் உள்ளார். கைதான 3 பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு மனநல ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் கூறும்போது, ‘சிறுமிகளின் புகார் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. அவர்களுக்கு மன நல ஆலோசனை வழங்கப்படும். அவர்களது வீடியோக்களை சமூக வலைதளங்களில் யாரும் பகிர வேண்டாம். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

இதற்கிடையே சிறுமிகளின் சகோதரர் மீதும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமிகள் கொடுத்த புகாருக்கு எதிர்ப்பு தெரிவித்து பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது பற்றியும் போலீசார் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News