பாலாற்று மேம்பாலத்தில் மீண்டும் வருகிற 18-ந் தேதி போக்குவரத்து தொடங்க ஏற்பாடு
செங்கல்பட்டு:
செங்கல்பட்டை அடுத்த மாமண்டூர் பாலாற்றில் 2 பாலங்கள் உள்ளன. சென்னை - திருச்சி மார்க்கத்தில் உள்ள பாலம் 1954-ம் ஆண்டும், திருச்சி - சென்னை மார்க்கத்தில் 1994-ம் ஆண்டும் கட்டப்பட்டன.
இந்த நிலையில் மேம்பாலங்களில் உள்ள இணைப்புகள் பழுதடைந்தன. இதனையடுத்து இதனை சரிசெய்யும் பணி தொடங்கியது.
முதல்கட்டமாக கடந்த மாதம் 7-ந் தேதி சென்னை - திருச்சி மார்க்கத்தில் மேம்பாலத்தில் சீரமைப்பு பணி தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.
திருச்சியில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் புக்கத்துறை, சாலவாக்கம், திம்மாவரம் பழப்பண்ணை, செங்கல்பட்டு வழியாக திருப்பி விடப்பட்டன.
இதனால் வாகனங்கள் சுமார் 15 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டது. ஆனால் சென்னை நோக்கி சென்ற வாகனங்கள் அருகில் உள்ள மேம்பாலம் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த 27-ந் தேதி மேம்பாலம் சீரமைப்பு பணி முடி வடைந்தது. பின்னர் அருகில் உள்ள திருச்சி - சென்னை மார்க்கத்தில் உள்ள மேம்பாலத்தில் சீரமைப்பு பணி தொடங்கியது.
சென்னை நோக்கி வரும் வாகனங்கள் வழக்கம் போல் வந்தன. சென்னையில் இருந்து சென்ற வாகனங்கள் மட்டும் சீரமைக்கப்பட்ட மேம்பாலம் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டது.
இந்த நிலையில் 2-வது மேம்பால சீரமைப்பு பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனை கடந்த 2 நாட்களுக்கு முன்பு அமைச்சர் ஏ.வ.வேலு மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
அப்போது மேம்பால பணி விரைந்து முடிக்க போக்குவரத்துக்கு அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
தற்போது 2-வது மேம்பாலத்தில் சீரமைப்பு பணி இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. வருகிற 17-ந் தேதி யுடன் இந்த பணி முடியும் என்று தெரிகிறது.
இதையடுத்து வருகிற 18-ந் தேதி முதல் 2 மேம் பாலங்களிலும் போக்கு வரத்துக்கு அனுமதிக்க அதி காரிகள் திடடமிட்டுள்ளனர். மேம்பாலத்தில் போக்கு வரத்து சீரான பின்னரே வாகனங்கள் பயண நேரம் குறையும்.