உள்ளூர் செய்திகள்
மருத்துவ படிப்பு

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் விதிமீறல்: சென்டாக் மாணவர்-பெற்றோர் சங்கம் புகார்

Published On 2022-03-13 02:37 GMT   |   Update On 2022-03-13 02:37 GMT
சென்டாக் நிர்வாகம் வெளிமாநில மாணவர்களுக்கு அதிக அளவு இடங்களை அளித்து 2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு நடத்தியுள்ளது. இதனால் புதுச்சேரி மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி:

மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வில் விதி மீறல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கவர்னர், முதல்-அமைச்சர், கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு புதுவை யூனியன் பிரதேச அனைத்து சென்டாக் மாணவர் பெற்றோர் சங்க தலைவர் நாராயணசாமி அனுப்பியுள்ள புகாரில் கூறியிருப்பதாவது:-

புதுவை மாணவர்களின் நலன் கருதி அரசும், சுகாதாரத்துறை செயலகமும் 2017-ம் ஆண்டு ஒரு அரசாணை வெளியிட்டது. அதில் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் மருத்துவம் படிக்க புதுச்சேரி மாநில சிறுபான்மை பிரிவு ஒதுக்கீட்டில் சேர மாணவர்கள் இல்லை என்றால் அதை நிர்வாக இடஒதுக்கீட்டுக்கு மாற்றி புதுச்சேரி மாணவர்களை சேர்க்கவேண்டும் என்று கூறியுள்ளது.

ஆனால் சென்டாக் நிர்வாகம் இதை பின்பற்றாமல் வெளிமாநில மாணவர்களுக்கு அதிக அளவு இடங்களை அளித்து 2-ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு நடத்தியுள்ளது. இதனால் புதுச்சேரி மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆகவே சென்டாக் நிர்வாகம் தவறாக நடத்திய 2-ம்கட்ட கலந்தாய்வின் மாணவர் சேர்க்கை ஆணையை ரத்து செய்து சுகாதாரத்துறை செயலகத்தின் உத்தரவு மற்றும் அரசாணையை பின்பற்றி புதிதாக 2-ம் கட்ட கலந்தாய்வு நடத்தி மருத்துவ சேர்க்கை ஆணையை வழங்கவேண்டும்.

மேலும் 2-ம் கட்ட கலந்தாய்வு குறித்து காலதாமதம் ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் நலன்கருதி நீதிமன்றம் செல்லும் நிலை உருவாகும். இதனால் இதுவரை நேர்மையாக கலந்தாய்வு நடத்திய சென்டாக் நிர்வாகத்துக்கு அவப்பெயர் ஏற்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News