உள்ளூர் செய்திகள்
சாலையை சீரமைக்காவிட்டால் பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகை போராட்டம் - தி.மு.க. எச்சரிக்கை
குயவர்பாளையம் லெனின் வீதியில் சாலையை உடனடியாக சீரமைக்காவிட்டால் பொதுப்பணித்துறை அலுவலகம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என தி.மு.க. எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை நெல்லித்தோப்பு தி.மு.க. செயலாளர் நடராசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட குயவர் பாளையம் லெனின்வீதி, நகரின் முக்கிய பிரதான சாலையாகும். இந்த சாலை குண்டும், குழியுமாக மிக மோசமாக உள்ளது.
இதனால் இந்த ரோட்டில் பயணம் செய்யும் பெண்கள், வயதானவர்கள், மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி பல விபத்துக்கள் நேரிடுகிறது. அதனால் இந்த சாலையை உடனடியாக போட வேண்டும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர், பொதுப் பணித்துறை முதன்மை பொறியாளருக்கு கடிதம் வாயிலாகவும், நேரிடையாகவும் வலியுறுத்தியதின் அடிப்படையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு பூஜை போடப்பட்டது.
ஆனால் இதுநாள் வரையில் அந்த சாலை போடவில்லை. இந்த விவகாரத்தில் பொதுப் பணித்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டுவது சரியில்லை.
இன்னும் ஒரு வாரத்திற்குள் பொதுமக்களின் நலன் கலதி இந்த சாலை போடாவிட்டால் பொதுமக்களை ஒன்று திரட்டி புதுவை பொதுப் பணித்துறை அலுவலகம் முன்பு கண்டன முற்றுகை போராட்டத்தை நெல்லித்தோப்பு தொகுதி தி.மு.க. நடத்தும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.