உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

முழுமையான பட்ஜெட்-தி.மு.க. வலியுறுத்தல்

Published On 2022-03-12 14:17 IST   |   Update On 2022-03-12 14:17:00 IST
திட்டக்குழுவை கூட்டி முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்ய நடவடிக்கை வேண்டும் என தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி:

புதுவை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சிவா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

 அடுத்த நிதியாண்டிற்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான எந்த வெளிப்படையான நடவடிக்கையையும் அரசு இதுவரை எடுக்கவில்லை.

பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு கூட்டப்பட வேண்டிய திட்டக்குழுவின் மறு ஆய்வுக்கூட்டம்  இதுவரை கூட்டப்படவில்லை. அதே சமயம் பெரும்பாலான அரசுத்துறைகளில் கடந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகைகளில் 40 சதவீதம் கூட செலவு செய்யப்படவில்லை என தெரி கிறது. 

இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தால் புதுவையின் வளர்ச்சி குறைவாகவே இருக்கும். மேலும் திட்டங்கள் நிறை வேற்றப்படுவது தாமதம் ஆகும். 

எனவே 2022--2023-ம் நிதியாண்டில் முழு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு முறையாகவும், விரைந்தும் எடுக்க வேண்டும். 

மத்தியில் மாநிலத்தில் அதிகாரத்தில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் அரசின் கூட்டணி அரசுதான் ஆட்சியில் உள்ளது. 

எனவே பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் ஆகியோரிடம் முதல்-அமைச்சர் பேசி புதுவைக்கான நிதி ஒதுக்கீட்டை இறுதி செய்து, முழு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையை தீவிரமாக எடுக்க வேண்டும்.

அதுபோல் மாநில திட்டக்குழுவின் கூட்டத்தை கூட்டி 2021-2022 பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள், செயல்படுத்த எடுத்த நடவடிக்கைகள், எதனால் முழு தொகையும் செலவு செய்யப்படாமல் உள்ளது உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்க வேண்டும்.

மேலும்,மாநில திட்டக் குழுவின் கூட்டத்தை கூட்டி துறை அதிகாரிகளுடன் விவாதித்து பட்ஜெட் தொகை குறித்த முடிவு எடுத்து விரைவில் முழு பட்ஜெட்டையும் தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Similar News