உள்ளூர் செய்திகள்
பயணிகள் நிழற்குடை அமைத்து தர வேண்டும் - சம்பத் எம்.எல்.ஏ. மனு
மரப்பாலம் சிக்னலில் பயணிகள் நிழற்குடை அமைத்து தர கோரி வைத்திலிங்கம் எம்.பி.யிடம் சம்பத் எம்.எல்.ஏ. மனு அளித்தார்.
புதுச்சேரி:
முதலியார்பேட்டை மரப்பாலம் சந்திப்பில் பஸ் நிறுத்த நிழற்குடை அமைத்து தர கோரி வைத்திலிங்கம் எம்.பி.யை சந்தித்து சம்பத் எம்.எல்.ஏ. மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுவையிலிருந்து சென்னைக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாகவும், புதுவையில் இருந்து திண்டிவனத்திற்கும், புதுவையிலிருந்து கடலூருக்கும், மேலும் காரைக்காலில் ஒரு திட்டம் என நான்கு திட்டங்கள் மூலம் புதிய ரெயில் பாதை அமைக்க தாங்கள் வைத்த கோரிக்கையின் மூலம் நிறைவேறி விடும் என்று நம்புகிறேன்.
புதுவையில் உள்ள பல சட்டமன்ற தொகுதியில் தங்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் பல பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனது முதலியார்பேட்டை தொகுதியில் பல இடங்களில் மின் விளக்குகள் எரியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். அதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வந்தேன். தாங்கள் தங்களின் நிதியிலிருந்து 200 எல்.இ.டி. பல்புகள் ஒதுக்கி தந்தீர்கள். அது முதலியார்பேட்டை தொகுதி மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
முதலியார்பேட்டை- கடலூர் சாலை மரப்பாலம் சந்திப்பு பஸ் நிறுத்தத்தை ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அங்கு இருந்த பயணிகள் நிழற்குடை சேதமடைந்ததால் அப்புறப்படுத்தப்பட்டு விட்டது.
இதனால் மழை காலங்களிலும் வெயில் காலங்களிலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே தங்களின் பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் மரப்பாலம் சந்திப்பில் உள்ள பஸ் நிறுத்தத்தில் மேம்படுத்தப்பட்ட நிழற்குடை அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம் ஏராளமான பொதுமக்கள் பயன் அடைவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.