உள்ளூர் செய்திகள்
பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும்- முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தல்
வேளாண் அறிவியல் மையத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இந்தியாவிலேயே சிறந்த வேளாண் அறிவியல் நிலையமான புதுவை காமராஜர் வேளாண் அறிவியல் நிலையம் அரசின் தெளிவற்ற கொள்கை, திறமையின்மையாலும் மெதுவாக அழிந்து வருகிறது. இந்தியாவில் உள்ள 716 நிலையங்களில் புதுவை முதலிடத்தில் இருந்தது.
இங்கு வேளாண் ஆராய்ச்சியாளரை இயக்குனராக நியமிக்காதது, தன்னாட்சி அதிகாரம் வழங்காதது, 11 ஆண்டாக பணிபுரிந்த 153 தினக்கூலி ஊழியர்களை பணி நீக்கம்செய்தது போன்ற காரணத்தில் சரிவை நோக்கி செல்கிறது. பணிநீக்கம் செய்யப்பட்ட 153 ஊழியர்கள்தான் அடித் தளமாக இருந்தனர்.
143 ஏக்கர் நிலப்பரப்பில் அனைத்து உற்பத்தி பணிகளிலும் இவர்கள் ஈடுபட்டனர். இவர்களுக்கு மாதம் ரூ.4 ஆயிரத்து 100 சம்பளமாக வழங்கப்பட்டது. அறிவியல் நிலையத்துக்க ஆண்டுக்கு ரூ.125 லட்சம் வருமானம் ஈட்டித் தந்துள்ளனர்.
இவர்களின் சம்பளம் ரூ.75.27 லட்சம். சுமார் 50 லட்சம் வருமானம் ஈட்டித்தந்த ஊழியர்களை பணி நீக்கம் செய்ததால் அவர்களின் குடும்பத்தினர் 2 ஆண்டாக வறுமையில் வாடுகின்றனர். இவர்களை பணிநீக்கம் செய்தது தவறு என கோர்ட்டு சுட்டிக்காட்டி உள்ளது.
எனவே, பணிநீக்கம் செய்யப்பட்ட 153 பேரையும் மீண்டும் பணியில் அமர்த்தி வேளாண் விஞ்ஞானியை இயக்குனராக நியமிக்க வேண்டும். அரசு இந்த நடவடிக்கை எடுத்தால் அறிவியல் நிலையம் செழிப்புற்று வேளாண் துறை வளர்ச்சி அதிகரிக்கும்.
இவர்களை பணிநிரந்தரம் செய்து, சம்பளத்தையும் அரசு நிர்ணயித்து அரசாணை வெளியிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.