புதுவையில் 60 ஆண்டுகள் பழமையான பழுதடைந்த துறைமுக பாலம் நள்ளிரவில் இடிந்து விழுந்தது
புதுச்சேரி:
புதுவை கடற்கரை சாலையில் தற்போது காந்தி சிலை அமைந்துள்ள இடத்தில் பிரெஞ்சு ஆட்சி காலத்தில் துறைமுகம் செயல்பட்டது.
இதற்காக பாலம் கட்டப்பட்டிருந்தது. அது சேதமடைந்து விழுந்ததால் சுதந்திரத்திற்கு பிறகு வம்பாகீரப்பாளையத்தில் புதிய துறைமுகம் கட்டப்பட்டது. இதற்காக கப்பலில் சரக்குககளை ஏற்றவும், இறக்கவும் கடலுக்குள் கட்டப்பட்ட பாலம் 1962-ம் ஆண்டு திறக்கப்பட்டது.
இதனை அப்போதைய மத்திய கப்பல் போக்கு வரத்து துறை மந்திரி ராஜ்பகதூர் திறந்து வைத்தார். சுதந்திரத்திற்கு பிறகு கட்டப்பட்ட புதுவை பழைய துறைமுக பாலம் சிதிலமடைந்தால், சரக்கு ஏற்றுமதி, இறக்குமதியை துறைமுக துறை கைவிட்டது.
இதனால், இந்த பழைய துறைமுக பாலத்தில் வி.ஐ.பி.க்கள் காலையும், மாலையும் நடைபயிற்சி செய்து வந்தனர். சுற்றுலா பயணிகள் பாலத்தில் நடந்து சென்று கடல் அழகை கண்டுகளித்து வந்தனர்.
மேலும், இந்த பாலத்தில் பல சினிமா படப்பிடிப்புகளும் நடந்தது. பாரம்பரியமிக்க பழைய துறைமுகம் பாலத்தின் அடிப்பகுதி ஆக்ரோச கடல் அலைகளாலும், உப்பு காற்றாலும் கடுமையாக சேதமடைந்து காண்கீரீட்டின் இரும்பு கம்புகள் வெளியே தெரியும் வகையில் எலும்பு கூடாக காட்சி அளித்தது.
பழைய பாலம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலை ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்கள் அந்த பகுதியில் செல்ல தடை விதிக்கப்பட்டது.
இருப்பினும், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அதிகாரிகள் மட்டும் இரவு நேரங்களில் நடைபயிற்சி சென்றனர். அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள் சிலர் பாலத்தில் மேல் இருந்து வலையை வீசி மீன்பிடித்தும் வந்தனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 60 ஆண்டுகள் பழமையான கடல் பாலம் இடிந்தது. பாலத்தின் ஆரம்பம் மற்றும் இறுதி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தூண்கள் வலுவாக இருந்ததால் நடுபகுதி இடிந்து சரிந்து கடலுக்குள் இறங்கிவிட்டது.
வழக்கமாக நள்ளிரவில் மீனவர்கள் பாலத்தில் இருந்து வலைவீசி மீன் பிடிப்பர். அதுபோல் நேற்று நள்ளிரவில் சில மீனவர்கள் பாலத்தில் இருந்து வலையை வீசிவிட்டு காத்திருந்தனர். அப்போது பாலம் இடிந்து சரிந்தது.
ஆனால், மீனவர்கள் பாதுகாப்புடன் உயிர் தப்பினார்கள். இதனால் உயிர் சேதம் ஏதுமில்லை.
தகவல் அறிந்த பொதுமக்களும், வழக்கமாக காலையில் கடற்கரையில் நடைபயிற்சி செல்வோர், சுற்றுலா பயணிகள் அங்கு அதிகாலை முதலே கூடி வருகின்றனர். இடிந்த பாலத்தை சோகத்துடன் பார்த்து செல்கின்றனர். பலர் செல்போன் மூலம் படமும், செல்பியும் எடுத்தனர்.
ஹாலிவுட் திரைடங்கள் உட்பட இந்திய மொழிகள் பலவற்றின் படப்பிடிப்பு இந்த பாலத்தில் நடந்துள்ளது. ஹாலிவுட்டின் லைப்ஆப்பை, விஷாலின் அயோக்கியா, சூர்யாவின் மவுனம் பேசியதே, காக்க காக்க, சிவகார்த்திகேயனின் மான் கராத்தே, ரெமோ, எதிர்நீச்சல், விஜய் சேதுபதியின் நானும் ரவுடிதான், விக்ரம் பிரபுவின் வீர சிவாஜி உள்ளிட்ட படங்கள் இந்த பாலத்தில் படமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.