உள்ளூர் செய்திகள்
தாம்பரம் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட வசந்தகுமாரியை மேயர் இருக்கையில் தா.மோ.அன்பரசன் அமரவைத்து வாழ்த்தினார்

தாம்பரம் மாநகராட்சி மேயராக வசந்தகுமாரி போட்டியின்றி தேர்வு

Published On 2022-03-04 12:22 IST   |   Update On 2022-03-04 17:05:00 IST
மேயர் போட்டியில் வேறு யாரும் இல்லாத நிலையில் போட்டியின்றி வசந்தகுமாரி தாம்பரம் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சென்னை:

புதிதாக தோற்றுவிக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சியின் 9 வார்டுகளில் அ.தி.மு.க. கூட்டணியும் 54 வார்டுகளில் தி.மு.க. கூட்டணியும், 7 வார்டுகளில் சுயேச்சைகளும் வெற்றி பெற்றிருந்தனர்.

இதில் அதிக இடங்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று தாம்பரம் மாநகராட்சியை கைப்பற்றியது.

இந்த நிலையில் நேற்று தி.மு.க. தலைமைக் கழகத்தில் இருந்து தாம்பரம் பகுதியை சேர்ந்த வசந்தகுமாரி கமலக் கண்ணன் மேயர் பதவிக்கும், துணை மேயர் வேட்பாளராக காமராஜ் பெயர்களும் அறிவிக்கப்பட்டன.

இதைத்தொடர்ந்து இன்று காலை தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் புதிய மேயர் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 


புதிய மேயராக பதவியேற்க பட்டியல் இனத்தைச் சேர்ந்த வசந்தகுமாரி தனது தந்தை கமலக்கண்ணனுடன் இருசக்கர வாகனத்தில் தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தார்.

மாநகராட்சி ஆணையரிடம் மேயர் பதவிக்குப் போட்டியிடுவதாக அவர் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை 49-வது வார்டு உறுப்பினர் டி.காமராஜன் முன்மொழிந்தார். 62-வது வார்டு உறுப்பினர் இந்திரன் வழிமொழிந்தார்.

மேயர் போட்டியில் வேறு யாரும் இல்லாத நிலையில் போட்டியின்றி வசந்தகுமாரி தாம்பரம் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அவருக்கு மேயருக்கான அங்கி அணிவிக்கப்பட்டு செங்கோல் வழங்கப்பட்டது. மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், எஸ்.ஆர்.ராஜா எம்.எல்.ஏ., பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி ஆகியோர் முன்னிலையில் வசந்தகுமாரி மேயருக்கான பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். அதன்பிறகு மேயர் நாற்காலியில் அமர வைக்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து இன்று மதியம் 2 மணி அளவில் துணை மேயர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார் காமராஜ் போட்டியின்றி தேர்வு ஆக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... நினைத்தது ஆசிரியர் பணி- கிடைத்தது மேயர் பதவி: பிரியா சிறப்பு பேட்டி

Similar News