உள்ளூர் செய்திகள்
புதுச்சேரியில் இருந்து பெங்களுருவுக்கு மீண்டும் விமான சேவை-அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
புதுவையில் இருந்து பெங்களுருவுக்கு மீண்டும் விமான சேவை தொடங்கும் என அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுவை மாநில முதல்-அமைச்சராக ரங்கசாமி கடந்த ஆண்டு மே மாதம் 7-ந்தேதி பொறுப்பேற்றார்.
ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி இன்றோடு 300 நாட்களை நிறைவு செய்தது.
இதையொட்டி தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 300 நாட்கள் சாதனை தொகுப்பை அமைச்சர் லட்சுமிநாராயணன் வெளியிட்டார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அரசியல் ஆதாயத்துக்காக சிலர் ஆட்சியில் எதுவுமே நடக்கவில்லை என கூறு கின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு தகுதியான 10 ஆயிரம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கி உள்ளோம். இதற்காக மட்டும் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.105 கோடி கூடுதல் செலவாகிறது. அனைத்து முதியோருக்கும் ரூ.500 உதவித்தொகையை உயர்த்தி உள்ளோம்.
இதற்காக ஆண்டுக்கு ரூ.36 கோடி கூடுதல் செலவாகி உள்ளது. கொரோனா நிவாரணமாக ரூ.3 ஆயிரம், அனைத்து மீனவர்களுக்கும் தடைக்கால நிவாரணம், மீனவ முதியோருக்கு ரூ.500 ஓய்வூதியம் உயர்வு, தீபாவளிக்கு அரிசி, பொங்கல் பொருட்கள், துணிக்கு ரூ.
ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா நிவாரண மாக மத்திய அரசின் பங்களிப்போடு ரூ.1 லட்சம் வழங்கப்பட்டு உள்ளது. காமராஜர் மணி மண்டப பணிகள் முடிந்து திறக்கப்பட்டுள்ளது. ரூ.60 கோடியில் ஆரியப்பாளையம் மேம்பாலம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது.
இந்திராகாந்தி சதுக்கம் முதல் ராஜீவ்காந்தி சதுக்கம் வரை ரூ.400 கோடியில் மேம்பாலம் அமைக்க திட்ட அறிக்கை தயார் செய்யும் நிறுவனங்களுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. பணிகள் தொடங்கினால் 2 ஆண்டில் பாலம் கட்டி முடிக்கப்படும்.
சென்டாக் மூலம் தேர்வாகும் அனைத்து மாணவர்களுக்கும் 100 சதவீதம் கட்டணத்தை அரசே செலுத்த அரசாணை விரைவில் வெளியிடப்படும். புதிய சட்டசபை கட்ட மத்திய அரசு ரூ.300 கோடி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலையை இந்தியாவிலேயே அதிகபட்சமாக ரூ.20 புதுவையில் குறைக்கப் பட்டுள்ளது. தலைமை செயலகத்தில் மட்டும் 300 ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கியுள்ளோம். துறைவாரியாக அனைத்து பதவி உயர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. வாரிசு சான்றிதழ் பெறுவது எளிமையாக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே புதுவை யிலிருந்து பெங்களூரு, ஐதராபாத்துக்கு விமான சேவை இயங்கியது. மத்திய அரசு 3 ஆண்டுக்கு டெண்டர் விட்ட காலம் முடிவடைந்தது. இப்போது மீண்டும் விமான சேவையை வருகிற 27-ந் தேதி தொடங்க உள்ளோம்.
புதுவையிலிருந்து பெங்களூருவுக்கு விமான சேவை தொடங்கும். அடுத்த வாரத்திலிருந்து டிக்கெட் முன்பதிவு தொடங்கும். ஐதராபாத்துக்கு விமான சேவை தொடங்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
மக்கள் எண்ணத்தை பூர்த்தி செய்யும் அரசாக முதல்&அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு திகழ்கிறது. கடந்த ஆண்டும் மத்திய அரசின் நிதி ரூ.ஆயிரத்து 750 கோடிதான் கிடைத்தது. இந்த ஆண்டும் அதே நிதிதான் கிடைத்துள்ளது. ஆனால் செய்ய முடியாது என சொல்லப்பட்டதையும் ரங்கசாமி அரசு செய்து முடித்துள்ளது.
மத்திய அரசிடம் புதுவையின் வளர்ச்சிக்காக கூடுதலாக ரூ.2 ஆயிரம் கோடி அரசு கோரியுள்ளது. இதுகுறித்து முதல்-அமைச்சர் மத்திய அரசுக்கு கடிதமும் அனுப்பி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.