உள்ளூர் செய்திகள்
பேரணியை கவர்னர் தமிழிசை கொடி அசைத்து தொடங்கி வைத்த காட்சி.

உக்ரைனில் சிக்கி தவிக்கும் புதுச்சேரி மாணவர்கள் மீட்கப்படுவார்கள் -கவர்னர் தமிழிசை உறுதி

Published On 2022-03-01 14:14 IST   |   Update On 2022-03-01 14:14:00 IST
உக்ரைனில் சிக்கி தவிக்கும் புதுவை மாணவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என -கவர்னர் தமிழிசை உறுதி அளித்துள்ளார்.
புதுச்சேரி : 

வெங்கடேஸ்வா பல் மருத்து கல்லூரி முகம், தாடை சீரமைப்பு துறையின் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு இருசக்கர பேரணி நடந்தது.

பேரணியை கவர்னர் தமிழிசை தலைமை வகித்து கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 100 பல் மருத்துவ மாணவர்கள் ஹெல்மெட் அணிந்து பேரணியாக சென்றனர். கடற்கரை சாலையில் தொடங்கிய பேரணி அரியூர் வெங்கடேஸ்வரா பல் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் முடிவடைந்தது. 

கல்லூரியின் முதன்மை இயக்க அதிகாரி வித்யா, கல்லூரி முதல்வர் செந்தில் நாதன், துணை முதல்வர்கள், கல்லூரி மருத்துவர்கள் இதில் பங்கேற்றனர். பேரணியை தொடங்கி வைத்த கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

முக கவசம் அணிவது எத்தகைய முக்கியத்துவமோ அதுபோல தலைக்கவசம் அணிவதும் முக்கியமாகும். சட்டத்தின்படி கட்டாயப்படுத்தி தலைக்கவசம் அணிவதைவிட நாமே கட்டுப்பாடுகளுடன் இருந்து தலைக்கவசம் அணிய வேண்டும். 

தலை கவசம் அணியாதவர்கள் விபத்துக்குள்ளாகி தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்படும்போது வேதனையாக உள்ளது. சட்டத்தை கடுமையாக்கி அபராதம் விதித்தால் போலீசாரை பார்க்கும்போது மட்டும் தலைக்கவசம் அணிகின்றனர்.  அதன்பின் அணியாமல் செல்கின்றனர். தலைக்கவசம் அணிந்தால் தலை கலைந்துவிடும் என நினைக்கின்றனர். உயிர் பாதுகாப்பு மிக முக்கியமானது. உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவர்களை மீட்பதில் எந்த பாரபட்சமும் இல்லை. இந்தியர்கள் அனைவரையும் மீட்க மத்திய அரசு முயற்சித்து வருகிறது.

இதற்காக 4 மத்திய மந்திரிகளை அருகில் உள்ள நாடுகளுக்கு பிரதமர் அனுப்பி மீட்க நடவடிக்கை எடுத்து  வருகிறார். இதில் இருந்து மத்திய அரசின் அக்கறை பற்றி தெரிந்துகொள்ளவேண்டும். உக்ரைன் நாட்டின் எல்லையில் இருந்த மாணவர்கள் உடனடியாக மீட்கப்பட்டுள்ளனர். மத்திய பகுதியிலும், பிற பகுதியிலும், ரஷ்யாவின் அருகில் உள்ள மாணவர்களை மீட்பதிலும் தாமதம்  ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அனைவரையும் மீட்க மத்திய அரசு முழு முயற்சி எடுத்து வருகிறது. புதுவையில் இருந்து சென்ற மாணவர்கள்  அனைவரும் நிச்சயம் பத்திரமாக மீட்கப்படுவார்கள். 

புதுவை அரசும், கவர்னர் மாளிகையும் மத்திய வெளியுறவுத் துறையுடன் தொடர்ந்து  தொடர்பில் இருந்து வருகிறது. பெற்றோர்களிடம் பேசும்போது மாணவர் களுக்கு தைரியம் அளிக்க வேண்டும். பாதுகாப்பாக இருக்கும்படி  அறிவுறுத்த வேண்டும். புதுவையில் 90 சதவீதத்தினருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. மீதமுள்ளவர்களும் தடுப்பூசி போட வலியுறுத்தி வருகிறோம். 

தடுப்பூசி அதிகளவு செலுத்தியதால்தான் புதுவையில் கொரோனா 3&வது அலை தீவிரமாக இல்லை. இன்னும் 4, 5&வது அலையை எதிர்கொள்ளவும் தடுப்பூசி அவசியம். தடுப்பூசி செலுத்தாதவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். சுகாதாரத்துறை கணக்கெடுப்பில் சில குறைகள் உள்ளதால் தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக தெரிகிறது.  உக்ரைன் நாட்டில் உள்ள மாணவர்களை மீட்க அளிக்கப்படும் முக்கியத்துவம், இலங்கையில் சிக்கியுள்ள மீனவர்களை மீட்கவும் அளிக்கப்பட்டு வருகிறது. 

இவ்வாறு கவர்னர் தமிழிசை தெரிவித்தார்.

Similar News