உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

மாணவர்களின் பெற்றோர் ரங்கசாமியுடன் சந்திப்பு

Published On 2022-02-28 14:54 IST   |   Update On 2022-02-28 14:54:00 IST
உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவர்களின் பெற்றோர் ரங்கசாமியுடன் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
புதுச்சேரி:

ரஷ்யா ராணுவம் உக்ரைன் மீது கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது.

உக்ரைனில் மருத்துவம் படிப்பதற்காகவும், மேல்படிப்புக்காகவும், வணிகரீதியாகவும் இந்தியாவிலிருந்து சென்ற 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர். இவர்களை மீட்க இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

முதல்கட்டமாக 131 பேர் மீட்டுவரப்பட்டுள்ளனர். புதுவையிலிருந்தும் மருத்துவம் படிக்க மாணவர்கள் சென்றுள்ளனர். முதல்கட்டமாக 8 மாணவர்கள் உக்ரைனில் சிக்கியிருப்பதாக தெரியவந்தது. பின்னர் உதவி எண்களை அரசு அறிவித்து, உக்ரைனில் சிக்கியுள்ளவர்களின் தகவல் திரட்டப்பட்டது. 

இதில் புதுவையிலிருந்து 14, காரைக்காலில் 5, மாகியில் 3, ஏனாமில் ஒருவர் என புதுவை மாநிலத்தை சேர்ந்த 23 மாணவர்கள் உக்ரைனில் சிக்கியிருப்பது தெரியவந்துள்ளது. ஏற்கனவே புதுவையை சேர்ந்தவர்களை மீட்டுத்தரும்படி பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோருக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி கடிதம் அனுப்பியிருந்தார். மேலும் புதுவை மாணவர்களின் பயண செலவையும் அரசே ஏற்கும் என ரங்கசாமி அறிவித்திருந்தார். 

இந்நிலையில்  புதுவை, காரைக்காலை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர் சட்டசபையில் முதல்&அமைச்சர் ரங்கசாமியை சந்தித்தனர். அப்போது, புதுவை மாவட்ட கலெக்டர் வல்லவன், காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா, எம்.பி. செல்வகணபதி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம், உக்ரைனில் சிக்கியுள்ளவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை. ஒரு சிலர் பதுங்கு குழிகளில் தவித்து வருகின்றனர். அங்கு மின்சாரம் இல்லாததால் தொடர்புகொள்ள முடியவில்லை. உணவு, தண்ணீர் இன்றி தவிப்பதாக செய்திகள் வருகிறது. அவர்களை மீட்டுத்தர முழு முயற்சியை அரசு எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 

முதல்-அமைச்சர் ரங்கசாமி, மத்திய அரசு மூலம் மாணவர்களை மீட்டுவர கோரிக்கை வைத்துள்ளோம். உக்ரைனில் உள்ள இந்திய துதரகத்தை தொடர்புகொண்டும் பேசி வருகிறோம். மாணவர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என உறுதியளித்தார்.

Similar News