உள்ளூர் செய்திகள்
போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பா.ம.க. நிர்வாகி ஆதரவாளர்களுடன் குரு சிலைக்கு மாலை அணிவிக்க சென்றதால் பரபரப்பு

Published On 2022-02-28 06:02 GMT   |   Update On 2022-02-28 06:02 GMT
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பா.ம.க. நிர்வாகி குரு சிலைக்கு மாலை அணிவிக்க சென்றபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
அரியலூர் :

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியில் நகரச் செயலாளராக இருந்து வந்தவர் மாதவன் தேவா. இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் கோ.க.மணி நகர செயலாளர் பதவியிலிருந்து நீக்கி அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட மாதவன் தேவா தனது பிறந்தநாளை முன்னிட்டும், நான்கு வார்டுகளில் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றதை முன்னிட்டு தனது ஆதரவாளர்கள் சுமார் 200-க்கும் மேற்பட்ட இளைஞர்களுடன் காடு வெட்டியில் உள்ள மறைந்த முன்னாள் வன்னியர் சங்க மாநில தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஜெ.குருவின் மணி மண்டபத்திற்கு சென்று அவரது சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக சென்று கொண்டிருந்தனர்.
 
அப்போது காடுவெட்டியிலுள்ள சிலருக்கு மாதவன் தேவா வரும் தகவல் கிடைத்துள்ளது. இதனால் மாதவன் தேவாவை உள்ளே விடக்கூடாது என கூறி ஏராளமான கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலரும் அப்பகுதியில் திரண்டு இருந்தனர்.

இதுகுறித்து போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் ஜெயங்கொண்டம் அருகே சின்னவளையம் கிராமத்திற்கு முன்பாகவே ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) ராஜன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சண்முக சுந்தரம், ரவிசக்கரவர்த்தி உள்ளிட்ட போலீசார்

 மாதவன் தேவா வந்த 20-க்கும் மேற்பட்ட வாகனங்களை தடுத்து நிறுத்தி அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தற்பொழுது அங்கு செல்ல வேண்டாம் எனவும் பின்னர் ஒருநாள் செல்லலாம் என பேச்சு வார்த்தை நடத்தி மாதவன்தேவா மற்றும் மாதவன் தேவாவின் ஆதரவாளர்களை அங்கு செல்ல விடாமல் தடுத்து திருப்பி அனுப்பினர்.

இதனால் மாதவன்தேவா ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது.
Tags:    

Similar News