உள்ளூர் செய்திகள்
மதுபானங்களுடன் உற்சாக கொண்டாட்டம்

மாமல்லபுரம் கடற்கரையில் கவுன்சிலர்களுக்கு விருந்து- மதுபானங்களுடன் உற்சாக கொண்டாட்டம்

Published On 2022-02-26 15:15 IST   |   Update On 2022-02-26 15:15:00 IST
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.
மாமல்லபுரம்:

தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

தேர்தலில் வெற்றி பெற்ற அனைவரும் வருகிற 2-ந் தேதி பதவியேற்கிறார்கள். அதன்பிறகு 4-ந் தேதி மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுக்க மறைமுக தேர்தல் நடத்தப்படும்.

இந்த பதவிகளை கைப்பற்ற பலர் முயற்சி செய்து வருகிறார்கள். அதற்காக காய்களையும் நகர்த்தி வருகிறார்கள். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

சென்னை, தாம்பரம், ஆவடி, காஞ்சீபுரம் மாநகராட்சிகளில் மேயர், துணை மேயர் பதவியை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. இதேபோல் நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர், துணை தலைவர், மண்டல குழு தலைவர் பதவிகளை கைப்பற்றவும் அக்கட்சியில் முக்கிய பிரமுகர்கள் முயற்சி எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கட்சி தலைமை இந்த பதவிகளுக்கான வேட்பாளர்களை முன்கூட்டியே முடிவு செய்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், மேயர், துணை மேயர், தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு கட்சி தலைமையால் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கருதப்படும் கவுன்சிலர்கள் மற்ற கவுன்சிலர்களை உற்சாகப்படுத்த அவர்களை சொகுசு விடுதிகளில் தங்க வைத்து விருந்து கொடுத்து வருகிறார்கள்.

சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை ரிசார்ட்டுகளில் வெளிமாவட்டங்களை சேர்ந்த நகர்ப்புற வார்டு கவுன்சிலர்கள் பலரை தங்க வைத்து இருப்பதாகவும், அவர்களிடம் ஆதரவு பெற கட்சி பிரமுகர்கள் ஆலோசனை நடத்தி பேரம்பேசி கேளிக்கை, மது விருந்து என குஷிப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

நேற்று இரவு கட்சி கொடிகளுடன், பல வெளி மாவட்ட சிறப்பு பதிவு எண் கொண்டகார்கள் பல மாமல்லபுரம் நகரப்பகுதிகளுக்குள் சுற்றியது.

உளவுத்துறை போலீசார் கோவளம், மாமல்லபுரம், கூவத்தூர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில் உள்ள முக்கிய ரிசார்ட்டுகள் மற்றும் ஓட்டல்களை ரோந்து போலீசார் உதவியுடன் ரகசியமாக கண்காணித்து வருகிறார்கள்.

Similar News