உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Published On 2022-02-26 14:53 IST   |   Update On 2022-02-26 14:53:00 IST
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு முறையான பணி நியமன ஆணை வழங்க வேண்டும். டி.ஆர்.பி, பாலிடெக்னிக் தேர்வுகளுக்கு பணியாற்றிய மேல்நிலை தலைமை ஆசிரியர்களுக்கும், கணினி ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டிய பஞ்சப்படி மற்றும் பயணப்படியை உடனடியாக வழங்க வேண்டும்.

12 மணி நேரத்துக்கு மேல் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு உழைப்பூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். தேர்வு பணிக்கு நியமனம் செய்யப்படும் ஆசிரியர், ஆசிரியைகளுக்கு தேவையான உணவு, தங்குமிடம் வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கழகத்தின் மாவட்டத் தலைவர் மு.முருகன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் மு.ஜெயராமன், அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மு.சாமிதுரை ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

Similar News