உள்ளூர் செய்திகள்
பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்துக்கும் தேர்தல்- அ.தி.மு.க. கணிப்பு
பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்துக்கும் தேர்தல்- வரும் கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி:
அரியாங்குப்பம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் கட்சியின் 50-வது ஆண்டு விழா, எம்.ஜி.ஆர். பிறந்தநாள், ஜெயலலிதா பிறந்தநாள் என முப்பெரும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
காமராஜர் திருமண மண்டபத்தில் நடந்த விழாவுக்கு மாநில பொருளாளர் ரவிபாண்டுரங்கன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் ஏழை-எளிய மக்களுக்கு ஹாட் பாக்ஸ், வேட்டி, சேலை மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
விழாவில் கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-
தமிழகத்தில் ஆட்சி அதிகாரம், அதிகார துஷ்பிரயோகம், அடக்கு முறையை பயன்படுத்தி செயற்கையாக தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. தி.மு.க. வெற்றி என்பது நிரந்தரமல்ல. 15 ஆண்டுகளுக்கு முன் பாராளுமன்றம், சட்டசபை, உள்ளாட்சிகள் அனைத்திலும் வெற்றி பெற்றிருந்த தி.மு.க.வை ஜெயலலிதா தரைமட்டமாக்கி 10 ஆண்டுகள் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியை நிலை நாட்டினார்.
அப்போது இருந்த 11 மாநகராட்சிகளையும் அ.தி.மு.க. வென்றது. அ.தி.மு.க.வுக்கு விசுவாச மாகவும், உண்மையாகவும் உழைப்பவர்கள் என்றாவது ஒரு நாள் உயர்த்தபடுவார்கள்.
அரியாங்குப்பம் அ.தி.மு.க.வுக்கு செல்வாக்குள்ள தொகுதி ஆகும். உள்ளாட்சித் தேர்தலில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து வார்டுகளில் திட்டமிட்டு நாம் செயல்பட்டால் அதிக இடங்களில் வெற்றியை பெறலாம்.
நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரலாம். அப்பொழுது தமிழகம், புதுவையில் அ.தி.மு.க. ஆட்சி மலர அனைவரும் சபதமேற்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், ராஜாராமன், இணை செயலாளர்கள் அன்பானந்தம், கணேசன், துணை செயலாளர்கள் அன்பழக உடையார், வக்கீல் பிரிவு செயலாளர் ராமலிங்கம், தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, தொகுதி செயலாளர்கள் ஆறுமுகம், பாஸ்கர், சிவகுமார், சம்பத், கருணாநிதி, நடேசன், உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அரியாங்குப்பம் தொகுதி செயலாளர் ராஜா என்ற வேலுசாமி நன்றி கூறினார்.