உள்ளூர் செய்திகள்
ஆண்டுக்கு 75 நாட்களாவது சட்டசபையை கூட்ட வேண்டும்-முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தல்
ஆண்டுக்கு 75 நாட்களாவது என்று சட்டசபையை கூட்ட வேண்டும் என்று முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையின் சட்டமன்ற கூட்டம் 20 நிமிடத்தில் முடிந்தது துரதிர்ஷ்ட வசமானது. சட்டமன்றத்தை ஒரு சம்பிரதாய அமைப்பாக மாற்றும் முயற்சியை ஜனநாயக உணர்வுள்ள யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கு ஒரு முறை யாவது சட்டசபை கூட வேண்டும் என சட்டம் சொல்கிறது.
3 மாதங்களுக்கு ஒருமுறை, 4 மாதங்களுக்கு ஒரு முறை, அவசியம் ஏற்படும் போதெல்லாம் சபையை கூட்டலாம்.மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து கூட்டப்படும் சபையை அரசு பொறுப்புணர்வோடு கூட்டி இருக்க வேண்டும்.
சட்டமன்ற ஆலோசனை அலுவல் குழுவைக் கூட்டி சட்டசபை எத்தனை நாட்கள், எத்தனை மணி நேரம், சட்டசபையில் விவாதிக்க வேண்டிய அலுவல்கள் குறித்து முடிவெடுத்து அறிவித்திருக்க வேண்டும். சட்டமன்றத்தில் விவாதிப் பதற்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று இந்த அரசு நினைக்கிறதா?
எந்த மாநிலத்தில் இப்படி 20 நிமிடத்திற்கு சட்டமன்றம் கூடி மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது? சட்ட மன்றத்தை பெயரளவில் வைத்துவிட்டு காலப்போக்கில், சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசமாக மாற்ற ஏதாவது திட்டம் உள்ளதா?
சட்டமன்றம் உள்ளதால் தான் நாம் புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்கிறோம். ஒரு ஆண்டில் குறைந்தபட்சம் 75 நாட்களாவது சட்டமன்றம் நடக்கும் என்ற மரபை அரசு உருவாக்க வேண்டும். மக்களின் வாக்குகளை பெற்றுள்ள ஒரு அரசு சட்டமன்றத்தைக் கூட்டுவதில் தயக்கம் காட்டக்கூடாது. அதனை முறையற்ற முறையில் முடக்குவதும் சரியல்ல.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.