உள்ளூர் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து தங்க காசு-பணத்தை திருடிய வாலிபர்
ஆப்பக்கூடல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க காசு-பணத்தை திருடிய வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
டி.என்.பாளையம்:
ஆப்பக்கூடல் அருகே வீட்டின் பூட்டை உடைத்து தங்க காசு-பணத்தை திருடிய வாலிபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
ஆப்பக்கூடல் அருகே உள்ள வேம்பதி சிந்தண கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. சம்பவத்தன்று பழனிசாமி வேலைக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று ஒரு பவுன் தங்க காசு, ரூ.2 ஆயிரம் ரொக்க பணம் ஆகியவற்றை திருடி கொண்டு வேகமாக சென்று உள்ளார்.
இதனை பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர் அதிர்ச்சி அடைந்து திருடன்.. திருடன் என சத்தம் போட்டுள்ளார்.
அக்கம் பக்கத்தினர் ஒன்று திரண்டு அந்த நபரை மடக்கி பிடித்தனர்.
இது குறித்து ஆப்பக்கூடல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த நபரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அந்த நபர் குமாரபாளையம், தட்டன் குட்டை, ஓலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சங்கர் (34) என தெரியவந்தது.
சங்கர் பூட்டி இருந்த வீட்டின் பூட்டை உடைத்து ஒரு பவுன் தங்க காசு, ரூ.2 ஆயிரம் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து அவரிடம் இருந்து தங்க காசு, பணம், மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து சங்கரை கைது செய்தனர்.
பின்னர் பவானி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.