உள்ளூர் செய்திகள்
சாலை மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்

காரைக்காலில் பருவ தேர்வுகளை ஆன்லைன் முறையில் நடத்த கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

Published On 2022-02-23 15:59 IST   |   Update On 2022-02-23 15:59:00 IST
காரைக்காலில் கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வுகளை ஆன்லைன் முறையில் நடத்தக் கோரி மாணவ, மாணவிகள் காரைக்காலில் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்கால்:

காரைக்காலில் கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வுகளை ஆன்லைன் முறையில் நடத்தக் கோரி, காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் நேற்று காரைக்காலில் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற் பட்டது.

காரைக்கால் அரசலாறு மதகடி பாலம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்தில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு, கல்லூரி மாணவர்களுக்கான பருவத் தேர்வுகளை ஆன்லைன் முறையில் நடத்தக்கோரி, கண்டனத்தை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், இது குறித்து, நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:-

புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பால், கல்லூரிகளில் இதுவரை நடைபெற்ற 4 பருவத் தேர்வுகளில் ஒன்று மட்டும் நேரிடையாக நடத்தப்பட்டுள்ளது. மற்ற 3 தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டன. கொரோனா தற்போது சற்று குறைந்தாலும், தமிழத்தைப் போல, இறுதி பருவத்தேர்வை தவிர தற்போது நடைபெறவுள்ள 5 வது பருவத்தேர்வை ஆன்லைன் முறையில் நடத்த வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் தொடரும் என்றனர்.

போராட்டம் குறித்து விபரம் அறிந்த, காரைக்கால் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம், நிரவிதிருப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாகதியாகராஜன் ஆகியோர், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆன்லைன் மூலம் தேர்வு நடத்த புதுச்சேரி முதல் அமைச்சர், கல்வித்துறை அமைச்சர் மற்றும் இயக்குனர் ஆகியோருடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனைத்தொடர்ந்து, மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த இடம் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

Similar News