தாம்பரத்தில் தோல்வி அடைந்த அ.தி.மு.க. முக்கிய வேட்பாளர்கள்
தாம்பரம் மாநகராட்சி தேர்தலில் 70 வார்டுகளில் அ.தி.மு.க. 8 இடங்களில் தான் வெற்றிபெற்றது. இந்த கட்சியில் வெற்றி பெறுவார்கள் என கணிக்கப்பட்ட முக்கிய வேட்பாளர்கள் தோல்வி அடைந்தது அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தாம்பரம் 10-வது வார்டு பம்மலில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் அப்பு என்கிற வெங்கடேசன் பம்மல் நகராட்சி துணைத் தலைவராக இருந்தவர். அனைவராலும் வெற்றி பெறுவார் என எதிர்பார்க் கப்பட்ட இவர் 1000 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
இதேபோல் அனகாபுத்தூர் நகராட்சி முன்னாள் தலைவராக இருந்த அனகாபுத்தூர் வேலாயுதம் என்பவரும் தோல்வி அடைந்தார்.
தாம்பரத்தில் முன்னாள் துணைத்தலைவர் கோபியும் தோல்வி அடைந்துவிட்டார். பீர்க்கங்கரணை பேரூராட்சி முன்னாள் தலைவர் சம்பத் குமாரும் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
40-வது வார்டு அ.தி.மு.க. மாவட்ட மாணவர் அணி செயலாளர் சாந்தகுமார், செம்பாக்கம் நகராட்சி முன்னாள் தலைவராக இருந்தவர் இவரும் தோல்வி அடைந்துவிட்டார். சிட்லபாக்கம் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவரான மோகன் என்பவரும் படுதோல்வியை சந்தித்துள்ளார்.
பல்லாவரம் முன்னாள் எம்.எல்.ஏ.வின் மனைவி தனம் 13-வது வார்டிலும், அவரது மகன் ஜெயபிரகாஷ் 22-வது வார்டிலும் போட்டியிட்டனர். இருவருமே தோல்வி அடைந்துவிட்டனர். ஜெயபிரகாஷ் பல்லாவரம் நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவராக இருந்தவர். இவர்களது தோல்வி அ.தி.மு.க.வில் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
தாம்பரம் மாநகராட்சி பீர்க்கங்கரணை வார்டு 59-ல் பா.ஜனதா சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் கங்காதேவி. இவர் அ.தி.மு.க.வில் மாவட்ட மகளிர் அணி செயலாளராக பதவி வகித்தார். இவர் அப்பகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டார். ஆனால் தேர்தலுக்கு முன்பு தனக்கு சீட் கிடைக்காது என தெரிந்து அ.தி.மு.க.வில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்து போட்டியிட்டார். ஆனாலும் தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.
தாம்பரம் மாநகராட்சி தேர்தலில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதியின் அண்ணன் ஜோசப் அண்ணாதுரை 17-வது வார்டில் போட்டியிட்டு 3,731 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இதேபோல் தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜாவின் மைத்துனர் டி.காமராஜ், 49-வது வார்டில் போட்டியிட்டு 2,759 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார்.
ஜெகத்ரட்சகன் எம்.பி.யின் மைத்துனர் காமராஜ் 30-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இதேபோல் அவரது உறவினர் ரமாதேவி என்பவரும் வெற்றிபெற்றுள்ளார்.
தி.மு.க.வில் போட்டியிட சீட் கிடைக்காததால் அதிகாரப்பூர்வ கட்சி வேட்பாளர்களை எதிர்த்து களம் இறங்கிய கிரிஜா சந்திரன் என்பவர் 39-வது வார்டில் சுயேட்சையாக வெற்றிபெற்றுள்ளார். இதேபோல் இவரது மகன் ஜெயபிரதிப் சங்கரன் 40-வது வார்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார்.
தி.மு.க.வில் சீட் கிடைக்காத தாய்-மகன் இருவரும் சுயேட்சையாக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
பல்லாவரத்தில் 20-வது வார்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் முத்துக்குமார் என்பவர் போட்டியிட்டார். உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்ட இவர் 165 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார்.