புதுவை சட்டசபை காலவரையின்றி ஒத்திவைப்பு
புதுச்சேரி:
புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி தொடங்கி செப்டம்பர் 2-ந் தேதி முடிவடைந்தது.
சட்டமன்றத்தை 6 மாதத்துக்கு ஒரு முறை கூட்ட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் புதுவை சட்டமன்றத்தின் குளிர்கால கூட்டம் இன்று கூடியது. கூட்டத்தை சபாநாயகர் செல்வம் குறள் வாசித்து தொடங்கி வைத்தார்.
முதல் நிகழ்வாக இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உறுப்பினர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து சட்ட முன் வரைவுகளுக்கு இசைவு அளித்ததை சபாநாயகர் செல்வம் அறிவித்தார்.
அப்போது எதிர்க் கட்சித்தலைவர் சிவா தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், கென்னடி, நாக.தியாகராஜன், சம்பத், செந்தில்குமார், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வைத்தியநாதன், ரமேஷ் பரம்பத் ஒட்டுமொத்தமாக எழுந்து பேச தொடங்கினர்.
எதிர்க்கட்சித்தலைவர் சிவா, சட்டசபை கூட்டத்தை எப்படி நடத்தப்போகிறீர்கள்? எத்தனை நாள் நடத்தப் போகிறீர்கள்? அரசு ஊழியர்களுக்கு சம்பளமே வழங்க முடியாத நிலை உள்ளது. மக்கள் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
சபாநாயகர் செல்வம்:- சபைக்கு தவறான கருத்தை எதிர்கட்சித் தலைவர் சொல்கிறார்.
சிவா:- நீட் தேர்வுக்கு விலக்கு கோரி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். பிரதமர் பெஸ்ட் புதுவை என கூறியுள்ளார். அதற்கு என்ன திட்டங்கள் நிறைவேற்றியுள்ளீர்கள்.
சபாநாயகர்:- வாக்குறுதிகளில் 75 சதவீதத்தை அரசு நிறைவேற்றியுள்ளது.
சிவா:- சபாநாயகர் பா.ஜனதா அமைச்சர் போல செயல்பட வேண்டாம். சபாநாயகராக செயல்படுங்கள். எங்களுக்கு அமைச்சர்களிடம் பதில் பெற்றுத்தாருங்கள்.
நாஜிம், கென்னடி:- காதுகொடுத்து எங்கள் கருத்தை கேளுங்கள். நாங்கள் உங்களுக்கும் சேர்த்துத் தான் பேசுகிறோம்.
சிவா:- சட்டமன்றத்தை கூட்ட ஏன் பயப்படுகிறீர்கள்? அதிகாரிகள் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. மக்கள் பிரச்சினைகளை பேசத்தான் கேட்கிறோம். தினக்கூலி ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் சம்பளம் தருவதாக கூறியது என்ன ஆனது? புதுவை முடங்கி கிடக்கிறது.
சபாநாயகர்:- உறுப்பினர்கள் அமருங்கள். முதல்-அமைச்சர் பதில் கூறுவார்.
சிவா: முதல்-அமைச்சரின் மாநில அந்தஸ்து கோரிக்கை என்ன ஆனது? அதற்காக என்ன நடவடிக்கைகள் எடுத்தீர்கள்? அதை சபையில் விளக்கி கூறுங்கள்.
சபாநாயகர்:- பெஸ்ட் புதுவையை உருவாக்க முதல்-அமைச்சர் அனைத்து முயற்சிகளையும் மேற் கொண்டுள்ளார்.
சிவா:- உங்களை தடுப்பது யார்? வெளிப்படையாக சொல்லுங்கள்.
கென்னடி:- 10 நிமிடம் ஒதுக்கி எங்கள் கருத்தை கேட்கக்கூடாதா? சபையில் விவாதம் நடத்தக் கூடாதா?
சிவா:- தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகிறது. பல தொழிற்சாலைகள் மாநிலத்தை விட்டு வெளியேறுகிறது. தொழிற் சாலைகளுக்கான சிறப்பு நிதி என்ன ஆனது?
சபாநாயகர்:- உறுப்பினர்கள் அமருங்கள். முதல்-அமைச்சர் விளக்கம் தருவார். என்ன நன்மைகள் நடந்திருப்பது என இங்குள்ள உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரியும்.
சிவா:- தீபாவளிக்கு அறிவித்த சர்க்கரை, அரிசி இதுவரை மக்களை சென்றடையவில்லை. பொங்கலுக்கு அறிவித்தது எப்போது போய் சேரும்? சிறப்புக்கூறு நிதி என்ன ஆனது?
செந்தில்குமார்:- பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியில் 40 சதவீதத்தை மட்டுமே அரசு செலவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீதமுள்ள 60 சதவீத நிதியை எப்படி செலவு செய்ய போகிறீர்கள்?
நாஜிம்:- மாநிலம் பாதிக்கப்படுகிறது. மக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதைத்தான் கேட்கிறோம். உங்களுக்காகவும்தான் கேட்கிறோம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதிலளிக்காமல் சபாநாயகர் சபை நடவடிக்கைகளை தொடர்ந்தார். இதனால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைகளில் பேனர்களை ஏந்தியபடி சபாநாயகர் இருக்கை நோக்கி சென்றனர். சபாநாயகர் இருக்கை முன்பு நின்று கோஷங்களை எழுப்பினர்.
மாநில அந்தஸ்து என்ன ஆனது? விவசாய கடன் தள்ளுபடி என்ன ஆனது? அண்ணாச்சி, அண்ணாச்சி ரேசன் கடை திறப்பது எப்போது அண்ணாச்சி? தினக்கூலி ஊழியர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் என்ன ஆச்சு? என கோஷம் எழுப்பினர். இந்த கோரிக்கைகளை பேனரிலும் எழுதியிருந்தனர்.
இதையடுத்து சபை காவலர்கள் அவர்களை முன்னே செல்லவிடாமல் தடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து எதிர்கட்சித்தலைவர் சிவா தலைமையில் தி.மு.க. எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்வதாகக்கூறி வெளியேறினர். அவர்களுடன் காங்கிரஸ் எம.எல்.ஏ.க்களும் வெளியேறினர்.
தொடர்ந்து சபாநாயகர், சட்ட முன்வரைவுக்கு இசைவு அளிக்கப்பட்டதை தெரிவித்து சபையை காலவரையின்றி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதையும் படியுங்கள்... உ.பி. மக்கள் தங்கள் வாக்குகளை பயன்படுத்தி ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும்- பிரதமர் மோடி