உள்ளூர் செய்திகள்
கொலை வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை
அரியலூரில் தொழிலாளி கொலை வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே கூலித்தொழிலாளி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அரியலூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
விக்கிரமங்கலம் அருகேயுள்ள காங்கேயன்பேட்டை, பிரதான சாலையைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் சௌந்திரராஜன் (வயது 42).
கூலித்தொழிலாளியான இவருக்கும், அதே பகுதி ஏரிக்கரைத் தெருவைச் சேர்ந்த சின்னப்பா மகன் கண்ணன் (52) என்பருக்கும் இடையே கடந்த 13.06.2019 அன்று ஏற்பட்ட முன் விரோத தகராறில் ஆத்திரமடைந்த கண்ணன் சௌந்திரராஜனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
இது குறித்து விக்கிரமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிந்து கண்ணனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை நீதிபதி மகாலட்சுமி, குற்றவாளி கண்ணனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து கண்ணன் திருச்சி மத்தியை சிறையில் அடைக்கப்பட்டார்.