செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு வ.உ.சி, பெரியார் அலங்கார ஊர்திகள் 16, 17-ந் தேதிகளில் வருகை
செங்கல்பட்டு:
வ.உ.சி. மற்றும் பெரியார் ஆகியோரின் அலங்கார ஊர்திகள் தமிழகம் முழுவதும் பொது மக்களின் பார்வைக்கு காட்சி படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அந்த அலங்கார ஊர்திகள் விரைவில் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு வர உள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்துக்கு 16-ந் தேதி அலங்கார ஊர்திகள் வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு 17-ந் தேதி வருகை தர உள்ளன. அவை பொது மக்களின் பார்வைக்கு காட்சி படுத்தப்பட உள்ளன.
இதையடுத்து அலங்கார ஊர்திகள் வரும் போது செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றன.
செங்கல்பட்டு மாவட்டத்தில் செய்ய வேண்டிய பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தலைமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவேல்ராஜ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். அலங்கார ஊர்திகள் வரும் போது என்னென்ன வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.