உள்ளூர் செய்திகள்
விருதுநகரில் கனிமொழி எம்.பி. தேர்தல் பிரசாரம் செய்தபோது எடுத்த படம்.

‘நீட்’ தேர்வை ரத்து செய்யும் வரை தி.மு.க. தொடர்ந்து போராடும்- கனிமொழி எம்.பி. பேச்சு

Published On 2022-02-10 14:39 IST   |   Update On 2022-02-10 15:47:00 IST
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் முதல்-அமைச்சரின் வேட்பாளர்கள் என விருதுநகரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட கனிமொழி எம்.பி. பேசினார்.
விருதுநகர்:

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி எம்.பி. பிரசாரம் செய்து வருகிறார்.

அவர் இன்று விருதுநகர் முத்துராமன்பட்டி, காளியம்மன் கோவில் தெரு, சந்திமரத் தெரு, தெப்பம், இந்திராநகர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த வேனில் சென்று பிரசாரம் செய் தார். அப்போது அவர் பேசியதாவது:-


உள்ளாட்சி அமைப்புகளில் தி.மு.க. நல்லாட்சி தரும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு நீங்கள் வாக்களித்ததால் தற்போது நல்லாட்சி நடக்கிறது. இதே நல்லாட்சி தொடர உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெற செய்யுங்கள்.

தி.மு.க. சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி பெண்களுக்கு இலவச பஸ் பயணம், அரசு வேலை வாய்ப்பில் முன்னுரிமை போன்றவற்றை அளித்து வருகிறது. படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெற ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொழில் தொடங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விரைவில் அந்த தொழிற்சாலைகள் அமையும் பட்சத்தில் வேலைவாய்ப்பு பெருகும்.

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கினர். அதனை ரூ. 5 ஆயிரமாக வழங்க வேண்டும் என்று தி.மு.க. அப்போது சொன்னது. அதை இப்போது வழங்கி வருகிறது. அதேபோல் தடுப்பூசி முகாம்கள் நடத்தி சாதனை படைத்துள்ளோம்.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் முதல்-அமைச்சரின் வேட்பாளர்கள். அவர்கள் உள்ளாட்சி அமைப்புக்கும், மக்களுக்கும் பாலமாக இருந்து தேவையான வசதிகள் கிடைக்க பாடுபடுவார்கள்.

நீட் ரத்து செய்யப்படும் வரை தி.மு.க. அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும். இந்த வி‌ஷயத்தில் முதல்-அமைச்சரின் கருத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பாராளுமன்றத்தில் குரல் கொடுத்தார். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் வரை தி.மு.க. தொடர்ந்து போராடும். உள்ளாட்சியில் நல்லாட்சி ஏற்பட தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு அனைவரும் வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News