உள்ளூர் செய்திகள்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்

277 வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க செங்கல்பட்டு மாவட்டத்தில் 1,067 வாக்குச் சாவடிகள்

Published On 2022-02-09 14:14 IST   |   Update On 2022-02-09 14:14:00 IST
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறைகள் இயங்கி வருகின்றன.

செங்கல்பட்டு:

மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் செங்கல்பட்டு மாவட்ட தேர்தல் பார்வையாளர் மகேஸ்வரி ரவிக்குமார், மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தலைமையில் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடன் தேர்தல் மாதிரி நடத்தை விதிகளைப் பின்பற்றுவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் கூறியதாவது:-

தாம்பரம் மாநகராட்சியில் 70 வார்டு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 703 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்குச் சாவடி மையத்தில் 7 லட்சத்து 64 ஆயிரத்து 731 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளார்கள்.

செங்கல்பட்டு, மதுராந்தகம், மறைமலைநகர் மற்றும் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிகளில் 108 வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க 242 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு மையத்தில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 413 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளார்கள்.

மேலும் அச்சரப்பாக்கம், இடைக்கழிநாடு, கருங்குழி, மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் மற்றும் திருப்போரூர் ஆகிய பேரூராட்சிகளில் 99 வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க 122 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு மையத்தில் 91 ஆயிரத்து 618 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளார்கள்.

மாவட்டத்தில் மொத்தம் 277 வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க 1,067 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 10 லட்சத்து 76 ஆயிரத்து 762 வாக்காளர்கள் ஓட்டு போட உள்ளார்கள். போட்டியிடும் வேட்பாளர் மனு ஏற்றுக் கொள்ளப்பட்ட நாளிலிருந்து அவருக்கு வழங்கப்படும் படிவத்தில் அவர் அன்றாடம் செலவு கணக்குகளை பராமரிக்க வேண்டும்.

தேர்தல் முடிந்து அறிவிப்பு வெளியிட்ட 30 தினங்களுக்குள் நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்கள் மாநகராட்சி ஆணையரிடமும், நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்கள் அந்தந்த நகராட்சி ஆணையர்களிடம், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர்கள் அந்தந்த பேரூராட்சி செயல் அலுவலரிடம் தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்.

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறைகள் இயங்கி வருகின்றன. தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்:1800 599 7625 மற்றும் 044-27427468 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், தாம்பரம் துணை கமி‌ஷனர் சிபி சக்கரவர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல் ராஜ், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) நாராயணன், தாம்பரம் மாநகராட்சி கமி‌ஷனர் இளங்கோவன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பாலாஜி சுந்தர ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Similar News