கூடுவாஞ்சேரி நகராட்சி 12-வது வார்டில் தி.மு.க. வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
செங்கல்பட்டு:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் இறுதி கட்ட வேட்பாளர் பட்டியல் தேர்தல் அலுவலர்களால் நேற்று வெளியிடப்பட்டது.
கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகளுக்கான கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் அலுவலரும் நகராட்சி ஆணையருமான பரிதி வெளியிட்டார். அதன்படி 12-வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு தி.மு.க.சார்பில் எம்.கே.டி. கார்த்திக்,அ.தி.மு.க.சார்பில் பாலாஜி, பா.ம.க.சார்பில் குமார்,சுயேச்சை வேட்பாளராக பாலமுருகன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
அ.தி.மு.க, பா.ம.க. மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் சரிவர வேட்பு மனு பூர்த்தி செய்யாததால் 3 பேரின் வேட்புமனுவும் தேர்தல் அலுவலரால் நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து தி.மு.க.வை சேர்ந்த கார்த்திக் மனு மட்டும் ஏற்றுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டது. 12-வது வார்டில் வேறு எந்த கட்சியை சேர்ந்தவர்களும் போட்டியிட களத்தில் இல்லை என்பதால் 12-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு எம்.கே.டி.கார்த்திக் போட்டியின்றி தேர்வானதாக கூடுவாஞ்சேரி நகராட்சி தேர்தல் அலுவலர் பரிதி அறிவித்தார்.