உள்ளூர் செய்திகள்
கைது

பட்டாசு கடைக்கு வரைபட அனுமதி வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம்- ஊராட்சி செயலர் கைது

Published On 2022-02-08 14:14 IST   |   Update On 2022-02-08 14:14:00 IST
பட்டாசு கடைக்கு வரைபட அனுமதி வழங்க ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலரை போலீசார் கைது செய்தனர்.
சாத்தூர்:

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்தவர் திருமலைராஜ் (வயது 50). இவர் பட்டாசு கடை கட்ட திட்டமிட்டார்.

இதற்காக சாத்தூர் யூனியனுக்குட்பட்ட மேட்டமலை பஞ்சாயத்து அலுவலகத்தில் விண்ணப்பித்தார். தொடர்ந்து வரைபட அனுமதிக்காக ஊராட்சி செயலர் கதிரேசன் (52) என்பவரை தொடர்பு கொண்டார்.

வரைபட அனுமதி கட்டணமாக ரூ.31 ஆயிரம் செலுத்த வேண்டிய நிலையில் கதிரேசன் கூடுதலாக ரூ.20 ஆயிரம் சேர்த்து ரூ.51 ஆயிரம் கேட்டாராம். அந்த பணம் எதற்கு என திருமலைராஜ் கேட்டபோது, மொத்தமாக கொடுத்தால்தான் வரைபட அனுமதி வழங்க முடியும் என கதிரேசன் தெரிவித்துள்ளார்.

வரைபட அனுமதிபெற ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுக்க திருமலைராஜ் விரும்பவில்லை. இதுதொடர்பாக அவர் விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து போலீசார் திருமலைராஜிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.

அதனை வாங்கி கொண்டு திருமலைராஜ், மேட்டமலை பஞ்சாயத்து அலுவலகம் சென்றார். அங்கு செயலர் கதிரேசனை சந்தித்து பணத்தை கொடுத்தார். அவர் பணத்தை பெற்றுக் கொண்ட சிறிது நேரத்தில் விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், பாரதிபிரியா தலைமையிலான போலீஸ் படையினர் அதிரடியாக வந்து சோதனை நடத்தினர்.

ஊராட்சி செயலர் கதிரேசனிடம் விசாரணை நடத்தினர். அவரிடம் வரைபட அனுமதிக்கான ரசீது பணம் ரூ.31 ஆயிரம் மட்டுமே இருந்தது. லஞ்ச பணம் ரூ.20 ஆயிரம் மாயமாகி இருந்தது. இதனால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

கதிரேசனின் கைகளில் ரசாயனபொடி இருந்ததால் அவர் பணத்தை பெற்றது உறுதியாக தெரிந்தது. ஆனால் பணம் எங்கே போனது? என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் அலுவலகம் அருகே உள்ள டீக்கடை மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அங்கு சோதனை நடத்தியதில் ரூ.20 ஆயிரம் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் ஊராட்சி செயலர் கதிரேசனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Similar News