உள்ளூர் செய்திகள்
டாஸ்மாக் ஊழியர் வங்கிக்கு எடுத்து சென்ற ரூ.5 லட்சம் பறிமுதல் - பறக்கும் படையினர் நடவடிக்கை
டாஸ்மாக் ஊழியர் உரிய ஆவணமின்றி வங்கிக்கு எடுத்து சென்ற ரூ.5 லட்சத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அரியலூர்:
அரியலூர், ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், வரதராசன்பேட்டை ஆகிய பகுதிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19 ஆம் தேதி நடைபெறு வதையொட்டி, பணப்பட்டு வாடாவை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் மேற்கண்ட பகுதிகளில் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று காலை அரியலூர் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே தேர்தல் பறக்கும் படை அலுவலர் கணேசன் தலைமையில் அதிகாரிகள் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த கருவேப்பில்லை கட்டளையைச் சேர்ந்த நடேசன் மகன் கலியமூர்த்தி என்பவரை மறித்து சோதனை மற்றும் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர் சுண்டக்குடியிலுள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருவதும், கடையில் கடந்த இரண்டு நாட்களாக வசூலான தொகை ரூ.5 லட்சத்து 3 ஆயிரத்து 450-ஐ அரியலூரிலுள்ள வங்கியில் செலுத்த வந்திருப்பது தெரியவந்தது.
எனினும் அதற்கான உரிய ஆதாரம் இல்லாததால் அதிகாரிகள் மேற்கண்ட தொகையினை பறிமுதல் செய்து, அரசு கருவூலத்தில் ஒப்படைத்தனர்.