உள்ளூர் செய்திகள்
கைது

மகளிர் சுய உதவி குழுவினரிடம் நூதனமுறையில் ரூ.13 லட்சம் மோசடி- வாலிபர் கைது

Published On 2022-02-05 09:24 IST   |   Update On 2022-02-05 09:24:00 IST
மகளிர் சுய உதவி குழுவினரிடம் நூதனமுறையில் ரூ.13 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் குமார் (வயது 33) இவர் சுயஉதவி குழுவை சேர்ந்த பெண்களின் ஆதார்எண் மற்றும் வங்கிக்கணக்கை பயன்படுத்தி அவர்களது பெயரில் தலா ரூ.40 ஆயிரம் வீதம் 33 பேரின் வங்கிகணக்கில் தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பணபரிவர்த்தனை செய்துள்ளார்.

அந்த நபர்களை நேரில் சந்தித்து வேறு ஒருவருக்கு கிடைக்க வேண்டிய கடன்தொகை உங்களது வங்கி கணக்கில் தவறாக டெபாசிட் ஆகிவிட்டது அந்த பணத்தை எடுத்து கொடுங்கள்.

உங்களது கடன் தொகை விரைவில் வங்கிக்கணக்கில் டெபாசிட் ஆகிவிடும் என லாவகமாக பேசி அவர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு ரூ.2 ஆயிரம் கொடுத்துள்ளார். இவ்வாறு 33 பேரிடம் தலா ரூ.40 ஆயிரம் வீதம் ரூ.13 லட்சத்து 20 ஆயிரம் மோசடி செய்துள்ளார்.

தனியார் நிதிநிறுவன ஊழியர் கடன் வாங்கியதற்கு மாத தவணை செலுத்த சொல்லி கேட்க சென்ற போது மகளிர் சுய உதவிக்குழுவினர், நாங்கள் கடன் வாங்கவில்லை எங்களது வங்கி கணக்கில் வந்த பணத்தை தவறாக வந்து விட்டதாக கூறி சதீஷ்குமார் வாங்கி கொண்டார் என்று 33 பேரும் ஒரே பதிலை கூறினர். இதையடுத்து தனியார் நிதி நிறுவனம் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.

அதனடிப்படையில் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சதீஷ்குமாரை கைது செய்து செங்கல்பட்டு குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News